×

தமிழ்நாட்டில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் :முதலீடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தகவல்!

சென்னை : டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாட்கள் அரசுமுறைப் பயணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

அதே போல் சிகாகோ நகரில், 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள்!!.. டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் உற்பத்தி அலகு, அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையம் தமிழ்நாட்டில் நிறுவப்பட உள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி! நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சென்னையில் ஒரு தயாரிப்பு மையத்தை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. திருச்சி, மதுரையில் Optum நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ள Optum நிறுவனம் ஏற்கெனவே சென்னையில் மருத்துவத்துறையில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் :முதலீடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தகவல்! appeared first on Dinakaran.

Tags : Trillion Company ,Tamil Nadu ,Chief Minister ,MLA K. ,Stalin ,Chennai ,Trillion ,K. Stalin ,America ,San Francisco ,Dinakaran ,
× RELATED தியாகிகளின் குடும்பத்தினருக்கு...