×

குருவின் உபன்யாசம்

ஒரு வெள்ளிக்கிழமை, நண்பகல் வேளை. சிருங்கேரியில் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைகளை முடித்துக் கொண்டு, மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.சிருங்கேரியை குரு பீடமாகக் கொண்ட திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வேதபாடசாலைகளில் பயின்று வந்த மாணவர்கள் அப்போது, ஸ்ரீசாரதாம்பாளையும் ஜகத்குருவையும் தரிசிக்க வந்திருந்தனர். அவர்களைச் சில நாட்கள் தங்கிப் போகும்படி, ஸ்வாமிகள் கட்டளை இட்டிருந்தார். அந்த மாணவர்களும் ஸ்வாமிகளதுஉரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஆன்மிக விளக்க உரை சொல்லும் உபன்யாசகர்களைப் பற்றி பேச்சு வந்தது. மதுரை தல்லாகுளம் வேதபாட சாலையைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்ற மாணவன் எழுந்து, ஜகத்குருவை வணங்கி. “இந்த விளக்க உரை பற்றி மனசுல உள்ள ஒரு விஷயத்தை, குருநாதர்கிட்ட வேண்டுகோள் வைக்க ஆசைப்படறேன் என்றான். அவனைச் சற்று ஏற இறங்கப் பார்த்த ஆச்சார்யாள், “என்னது? சொல்லேன்!” எனப் பணித்தார்.உடனே, அவன் தாழ்ந்த குரலில், “வேற ஒண்ணுமில்லே குருநாதா! இப்பல்லாம் கதா பிரவசனம் பண்ணும் சில உபன்யாசகர்கள், கருத்தை விட்டுட்டு, இதர விஷயங்களைத்தான் நிறைய சொல்லறா! இதனால… கரு மறந்து போயிடறது.

இதர விஷயங்கள் மட்டும் நல்லா ஞாபகத்தில் இருக்கு. ‘நல்ல கதையை கேட்டோம்’கிற திருப்தி ஏற்பட மாட்டேங்கறது! இது பிரவசனம் பண்றவாளோட குறைபாடா அல்லது கேக்கறவாளோட குறைபாடா? மகா ஸ்வாமிகள்தான் தெளிவுபடுத்தனும்!” என்றான்.இதைக் கேட்ட மற்றவர்களும், இந்த சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். ஜகத்குரு புன்னகைத்தார். கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தவர், மொதல்ல “நீங்கள் எல்லோரும் சாப்பிட்டாச்சா?” என்று விசாரித்தார்.

அனைவரும், “சாப்பிட்டுவிட்டோம் ஸ்வாமி என்றனர்.“சந்தோஷம்” என்று சிரித்த சத்குரு தொடர்ந்தார்: “எங்கே, கதைக் கேட்டாலும், அதுல இருக்கிற நல்ல கருத்தை மட்டும் நாம் எடுத்துண்டு மத்ததை விட்டுடணும். இதுக்கு, நம்ம மனசை பக்குவப்படுத் திக்கணும் நாமதான் அன்னபட்சி மாதிரி காதுலேர்ந்து கிரகிச்சுக்கணும்… என புரியறதா?” என்று கேட்டுட்டு பலமாகச் சிரித்தார்.அவரது பதில், சீடர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. சத்குருவை பார்த்தபடி… அவர்கள் தங்களுக்குள் ஏதோ ரகசியமாக விவாதித்தனர்!

சூர்யநாராயணன் என்ற சிஷ்யன் எழுந்து, மஹாசந்நிதானத்தை நமஸ்கரித்து பய பக்தியுடன் “ஜகத்குருவிடம் ஒரு பிரார்த்தனை! நாங்கள்லாம் ஸ்ரீமத் ராமாயணம் கேக்கணும்னு ஆசைப்படறோம். ஜகத்குருதான் கிருபை பண்ணி…” – அவன் முடிப்பதற்குள், “அதுக்கென்ன… நல்லா ஏற்பாடு பண்ணிட்டா போறது. நன்னா வாசிச்ச உபன்யாசகர் மைசூர்லேர்ந்து வரவழைச்சு சொல்லச் சொல்றேன்” என்றார் ஸ்வாமிகள்.யக்ஞநாராயணன் என்ற சிஷ்யன் தயங்கியபடியே எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்தான். பிறகு பணிவுடன், “ஜகத்குருவின் அம்ருத வாக்கால ஸ்ரீமத் ராமாயணம் சிரவணம் (கேட்டல்) பண்ணணும்னு எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை. குருநாதர் அனுக்கிரகிக்கணும்!” என்று வேண்டினான்.

ஸ்வாமிகள் நெகிழ்ந்து போனார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கலகலவென சிரித்தவர், “ஓஹோ… இதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?! பார்ப்போம்… பார்ப்போம்…” என்றபடி எழுந்து உள்ளே சென்று விட்டார். சிஷ்யர்களுக்கு ஏமாற்றம்!நாட்கள் கடந்தன. அன்றும் வெள்ளிக்கிழமை; சந்தியாகால வேளை. ஸ்ரீசாரதாம்பாள் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திடீரென… அம்பாளைத் தரிசிக்க வந்தார் ஸ்வாமிகள். அவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது மணி எட்டு இருக்கும்! ஆலய வாசலில் தயாராகக் காத்திருந்த சிஷ்யர்கள், ஸ்வாமிகளைக் கண்டதும், நெடுஞ்சர் கிடையாக விழுந்து நமஸ்கரித்தனர். ஆச்சார்யாள் அப்படியே நின்றார்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே, “, விடமாட்டேள் போல இருக்கே. சரி… சரி… நீங்க ஆசைப்பட்டபடியே நடத்திடலாம்! ஒரு நல்ல நாள் பார்த்து ஆரம்பம் பண்ணுவோம்” என்றபடி வேகமாகப் புறப்பட்டார்.அந்த நல்ல நாளும் வந்தது. ஏழு நாட்கள் ஆச்சார்யாள் ஸ்ரீசுந்தரகாண்டம் சொல்வதென முடிவாயிற்று. ‘மஹா சந்நிதானமே பிரவசன அனுக்கிரகம் பண்ணப் போறார்’ என்ற செய்தி பரவ, ஏகக் கூட்டம். அன்று மழை வேறு தூறி ஓய்ந்திருந்தது!

ஆசனத்தில் வந்து கம்பீரமாக அமர்ந்த ஜகத்குருவை, சாட்சாத் வேத வியாஸ பகவானே வந்து அமர்ந்திருப்பதுபோல் உணர்ந்தனர். கணீரென்ற குரலில் பிரவசனம் ஆரம்பமானது. அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென பிரவசனத்தை நிறுத்திய ஸ்வாமிகள், மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தார். அவரிடம், “ஆரம்பத்திலேயே சொல்லணும்னு இருந்தேன்… மறந்துட்டேன்! நீ என்ன பண்றே… என் பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு மனைப் பலகையைக் கொண்டு வந்து போடு. அதுமேல பட்டு வஸ்திரத்தை விரி. அப்புறம், ஒரு வெள்ளித் தட்டுல ரெண்டு பெரிய கொய்யாப் பழத்தை கொண்டு வந்து வை… சீக்கிரம்!” என்று கட்டளையிட்டார். உத்தரவு பூர்த்தி செய்யப்பட்டு, உபன்யாசம் தொடர்ந்தது.

ஐந்தாம் நாள் உபன்யாசமும் பூர்த்தி அடைந்தது. அந்த மாணவர்களுக்கும் நன்கு புரிகிற மாதிரி விவரித்த ஸ்வாமிகள், இடையிடையே தர்மசாஸ்திர நுணுக்கங்களையும் விளக்கினார்.திருநெல்வேலி வேத பாடசாலையைச் சேர்ந்த வேங்கடேசன் என்ற மாணவன் மெள்ள வந்து ஜகத்குருவை நமஸ்கரித்து, “எனக்கு ஒரு சந்தேகம் குருதேவா” என்றான் தயங்கியபடி.“என்ன சந்தேகம், கேள்!” என்றார் ஸ்வாமிகள்.

அவன் திக்கித் திணறியபடி கேட்டான்: “குருநாதா! உபன்யாசம் ஆரம்பிச்ச நாள்லேர்ந்து உங்க பக்கத்துல ஒரு பலகையைப் போட்டு அதுக்கு முன்னால ஒரு தட்டுல கொய்யா பழத்தையும் வைக்கச் சொல்றேள்! அது எதுக்குனு புரியலை…”இதைக் கேட்டு சிரித்த ஆச்சார்யாள், “சொல்றேன் கேளு… ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்… தத்ர தத்ர க்ருதமஸ்த சலிம்’னு… எங்கெல்லாம் ஸ்ரீராமனின் பொருள் பேசப்படறதோ, அங்கெல்லாம் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி வந்துடுவார்னு ஒரு நம்பிக்கை. இங்கே நாம ஸ்ரீமத் ராமாயணம்னா சொல்றோம்.

அதனால் நிச்சயம் ஸ்வாமி வருவாரில்லையா? அவர் நாம நிக்க வைக்கலாமோ? அவர் ‘நவ வ்யாகரன பண்டிதராச்சே! அவர் உட்காரத்தான் ஆசன பலகை! அப்புறம்… நம்ம வீட்டுக்கு யாராவது ‘விருந்தாளி’ வந்தா பழம்-பட்சணம், காபியெல்லாம் குடுத்து உபசாரம் பண்ற மாதிரிதான் இது ஸ்வாமிக்கு கொய்யாப் பழம்னா ரொம்பவும் பிடிக்கும். இப்ப புரிஞ்சுண்டியா?” என்று கேட்டார்.தலையாட்டினான் வேங்கடேசன். அந்த இளம்பிஞ்சு இன்னும் தெளிவடைய வில்லை என்பது அந்த தெய்வத்துக்கு தெரியாதா என்ன!ஆறாம் நாளன்றும் நல்ல கூட்டம். அன்றைய உபன்யாசத்தை உருக்கமாகக் கூறி முடித்தார் ஜகத்குரு.

அனைவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துச் சென்ற பின்னர், பாடசாலை மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக நமஸ்கரித்து நகர்ந்தனர். கடைசியாக, முதல் நாள் சந்தேகம் கேட்ட பாடசாலை மாணவன் வேங்கடேசன் நமஸ்கரித்து விட்டு, கைகூப்பி நின்றான். புன்முறுவலுடன் அவனை ஏறிட்ட ஸ்வாமிகள், “ஓம் முழுப் பேரென்ன?” என்று வினவினார்.

“பிரசன்ன வேங்கடேசன் குருநாதா!”
“பூர்வீகம் எது?” என்று கேட்டார்.
“திருநெல்வேலி. கடையநல்லூர் பக்கம் ஒரு குக்கிராமம் குருநாதா”
“தகப்பனார் என்ன பண்றார்?”
உபாத்யாயம்

உடனே ஆச்சார்யாள், “பேஷ… பேஷ்” என்று கூறிவிட்டு, அன்றைய தினம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கொய்யாப் பழங்களை தன் கைகளால் எடுத்து, அவனிடம் தந்தார். பிறகு, “வேங்கடேசா! இவை ஆஞ்சநேயர் சாப்பிட்ட உச்சிஷ்ட (மீதி) பிரசாதம். நறுக்கி நீயும் வாயில போட்டுண்டு எல்லாருக்கும் கொடு!” என்று விடைகொடுத்தார்.ஆனால், பிரசன்ன வேங்கடேசன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆச்சார்யாள் அளித்த இரு கொய்யாப் பழங்களையும் கைகளால் உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்!அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள் தனக்குள் சிரித்தபடி, “என்ன பிரசன்ன வேங்கடேசா! பழங்களைக் கையில் வெச்சுண்டு அப்படி என்ன யோசனை? கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்!” என்றார். அவன் தயங்கினான்.

“சொல்லு” – தைரியப்படுத்தினார் ஜகத்குரு.“வேற ஒண்ணுமில்லே குருநாதா! அந்த ஆசனத்துல ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்து ஸ்ரீமத் ராமாயணம் கேட்டுட்டு, அவருக்கு அர்ப்பணிச்ச கொய்யாப் பழங்களையும் சாப்பிட்டுப் போறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.“இத நான் சொல்லலே! பரம்பரை பரம்பரையா நம்ம தேசத்துல ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் பண்ணிண்டு வர பெரியவாள்லாம் பூர்ண நம்பிக்கையோட கடைப் பிடிக்கிற வழக்கம். இது சத்தியமும் கூட! இதுல, உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஞானகுரு.அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது பிசரன்ன வேங்கடேசனுக்கு. பேசத் தயங்கினான். அவனை அருகில் இன்னும் நெருங்கி வரச் சொன்ன ஆச்சார்யாள், “எதுவா இருந்தாலும்… மனசுல பட்டதை தைரியமா சொல்லு!” என்று உற்சாகப்படுத்தினார்.

உடனே அவன், “நானும் பிரவசனம் கேக்கறச்சே அந்தப் பலகையையே அடிக்கடி பார்த்துண்டிருந்தேன்… என் கண்ணுக்கு ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்ததா தெரியவே இல்லியே! பக்கத்துல இருந்த சகாக்களையும் கேட்டேன். அவாளும் ‘தெரியலே’னுட்டா. அதான்…” என மென்று விழுங்கினான், வேங்கடேசன்.உடனே ஆச்சாரியாள், “சரி… சரி. இது உன்னோட முதல் சந்தேகம்! ‘ரெண்டு கொய்யாப் பழமும் வெச்சது வெச்சபடி அப்படியே இருக்கே! ஆஞ்சநேய ஸ்வாமி சாப்பிட்டிருந்தா, குறைஞ்சிருக்கணுமே’ங்கறதுதானே ரெண்டாவது சந்தேகம்!” என்று கேட்டார்.

பிறகு, “ஆத்மார்த்தமா பக்தியும், சிரத்தையும் இருந்தா ஆஞ்சநேய ஸ்வாமி பவ்யமா, பக்தியோடு அமர்ச்து ஸ்ரீமத் ராமாயண சிரவணம் பண்றத நாமும் தரிசிக்கலாம்! ஆஞ்சநேயர் விஸ்வரூபியா வந்து உட்கார்ந்துட்டார்னா அத பார்த்துட்டு, தாங்கிக்கிற சக்தி எல்லோருக்கும் இருக்குமா? அதனால அவர், சூட்சுமமா வந்து கேட்டுட்டுப் போவார்!” என்று விளக்கம் அளித்தார். அத்துடன், “உனக்கு கிரந்த எழுத்து வாசிக்கத் தெரியுமா?” என்று வேங்கடேசனிடம் கேட்டார்.

“தெரியும் குருநாதா” என்றான் அவன்.உடனே, உள்ளேயிருந்து உபநிஷத் சம்பந்தமான ஒரு கிரந்த புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார் ஆச்சார்யாள். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு சிறு பகுதியை சுட்டிக் காண்பித்து, “இதை, ஐந்து நிமிஷத்தில் மனப்பாடம் செய்து அப்டியே என்னிடம் ஒப்புவிக்க வேண்டும். முடியுமா பார்” என்றார் சிரித்தபடி!புத்தகத்துடன் சற்றுத் தள்ளிப் போனான் பிரசன்ன வேங்கடேசன். சரியாக ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆச்சார்யாளிடம் வந்தவன், அவர் குறிப்பிட்ட பகுதியை அட்சர பிசகின்றி ஒப்பித்தான்.

ஆச்சார்யாள் முகத்தில் பரம சந்தோஷம். புத்தகத்தைக் கையில் எடுத்தார். தான் உருப்போடச் சொன்ன அந்தப் பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, “வேங்கடேசா, நான் சொன்னபடி அஞ்சே நிமிஷத்துல படிச்சு ஒப்பிச்சுட்டே! நீ அந்த புஸ்தகத்திலேர்ந்து குறிப்பிட்ட அட்சரங்களை கிரகிச்சுட்டதால… அவை, அந்த இடத்திலேருந்து மறைஞ்சு போயிடலையே! கிரந்த எழுத்துக்கள்லாம் இருந்த இடத்துல அப்படியே இருக்கோல்லியோ? அதுமாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம எதை அர்ப்பணிச்சாலும், அதுல இருக்கிற பக்தி சிரத்தையுடன் கூடின ருசியை மாத்திரம் ஸ்வீகரிச்சுண்டு, பதார்த்தங்களைப் பரம கருணையோடு நமக்கே விட்டுடுறார். வெச்ச கொய்யா ரெண்டும் வாடாம-வதங்காம, முழுசா அப்படியே இருக்கிற ரகசியம் இப்ப புரியறதா உனக்கு?” என்று கேட்டுவிட்டு, சிரித்தார்.

பிரசன்ன வேங்கடேசன் பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். அங்கு, சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.பிரவசன பூர்த்தி நாள்! மதியம் மூன்று மணிக்கே மேடைக்கு ஆச்சார்யாள் வந்து விட்டார். உபன்யாசம், மிக உருக்கமாகப் போய்க் கொண்டிருந்தது. பூர்த்தி கட்டம். அனைவரும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

பெரிய வானரம் ஒன்று தாவித் தாவி அந்த உபன்யாச கூட்டத்துக்கு வந்தது. ஒருவரையும் லட்சியம் பண்ணாமல் மேடையில் பாய்ந்து ஏறி, ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்காக போடப்பட்டிருந்த பலகையில், ஆச்சார்யாளைப் பார்த்தபடி சாதுவாக அமர்ந்து கொண்டது! ஜகத்குரு சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த கொய்யாப் பழங்களை ‘அது’ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கூட்டம் இதைப் பார்த்து வியந்தது!

மாலை ஐந்து மணி. அதுவரை அந்த வானரம் அப்படி இப்படி அசையவே இல்லை. பழங்களையும் தொடவில்லை. ஆச்சார்யார் உபன்யாசத்தைப் பூர்த்தி செய்து, ‘பலசுருதி’ (பலன்) சொல்லி முடித்தார். பிறகு வலப் புறம் திரும்பி வானரத்தைப் பார்த்து, “ஆஞ்சநேய ஸ்வாமி ஸ்ரீமத் ராமாயணம் கேக்கறதுக்காக நீங்க வந்து உக்காந்திருக்கறதுல ரொம்ப சந்தோஷம்! அந்த ரெண்டு கொய்யாப் பழங்களும் உங்களுக்குத்தான்.  ஸ்வீகரிச்சுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்ட வானரம், பழங்களை எடுத்துக் கொண்டு ஆச்சார்யாளையே வாஞ்சையுடன் சற்று நேரம் உற்றுப் பார்த்தது.

இதற்குள் கூட்டத்திலிருந்து உரத்த குரலென்று, “ஆஞ்சநேயா… ராமா ராமா!” என்று முழுங்கியது. அனைவரும் குரல் வந்த திசையை ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கே பிரசன்ன வேங்கடேசன், கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தான்! இந்த நேரத்தில், மெள்ள மேடையை விட்டுக் கீழிறங்கிய வானரம், ராஜநடை போட்டபடி நடந்து சென்று மறைந்தது.

கண்களில் நீர் முட்ட ஜகத்குருவிடம் வந்த பிரசன்ன வேங்கடேசன், “குருதேவா! ஒங்க பக்கத்துல பலகையில வந்து ஒக்காந்துட்டு போனது, என் கண்ணுக்கு வானரமா தெரியலே. சாட்சாத் ஆஞ்சநேய ஸ்வாமி, ஆஜானுபாகுவான சரீரத்தோட கம்பீரமா உட்கார்ந்திருந்ததை பார்த்தேன்! ஆச்சார்யாளோடு ஸ்வாமி ஏதோ பேசியதையும் பார்த்தேன்! நீங்க சொன்ன தாத்பர்யம் இப்ப எனக்குப் புரிஞ்சுடுத்து குருநாதா என்று ஜகத்குருவின் பாதார விந்தங்களில் விழுந்தான். எத்தனையோ பேர் தேற்றியும் அவன் கண்ணீரை மட்டும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.அந்த பரப்பிரம்மம் கரம் உயர்த்தி வேங்கடேசன் ஆசீர்வதித்தது!

ரமணி அண்ணா

The post குருவின் உபன்யாசம் appeared first on Dinakaran.

Tags : Sringeri ,Jagadguru ,Srisree ,Tirunelveli ,Madurai ,Ramanadhuram ,
× RELATED ராஜகோபுர மனசு