×

சீகூர் வனத்தில் 2 செந்நாய் உயிரிழப்பு

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் 2 பெண் செந்நாய்கள் உயிரிழந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கழுதை புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய வகை வனவிலங்குகள், பிணந்தின்னி கழுகுகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. செந்நாய் கூட்டங்கள் கணிசமாக உள்ளன. இந்நிலையில், மசினகுடி வெளிமண்டலத்திற்குட்பட்ட சீகூர் வனச்சரக பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை வன ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆனைகட்டி பகுதியில் புதர் செடிகளை ஒட்டி 2 செந்நாய்கள் இறந்து கிடப்பதை பார்த்தனர்.

இதுதொடர்பாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ேநற்று மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார் தலைமையில் சீகூர் வனச்சரகர் தயானந்தன் மற்றும் வன ஊழியர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ், கால்நடை மருத்துவர் இந்துஜா ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். முதல் கட்ட ஆய்வில் 4 வயது மதிக்கத்தக்க பெண் செந்நாய்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆய்விற்காக உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. எந்த காரணத்தினால் இறந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கரடி, ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஆகியவை உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வனவிலங்கு நல ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The post சீகூர் வனத்தில் 2 செந்நாய் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sigur forest ,Mudumalai Tiger Reserve ,Nilgiris District ,Cheetah ,Mule ,Dinakaran ,
× RELATED சீகூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் 2 பெண் செந்நாய்கள் உயிரிழப்பு