×

திருவின் குரல் –திரை விமர்சனம்

உடல்நிலை பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சராசரி மனிதர்களின் வாழ்க்கையில், திடீரென்று சில சமூக விரோதிகள் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி சொல்லியிருக்கிறது, ‘திருவின் குரல்’. கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பாரதிராஜாவின் மகன் அருள்நிதிக்கு பேச முடியாது, காது கேட்காது. தொலைவில் பேசுவது அவரது செவியில் விழாது. அருகில் நடப்பவற்றை அவரது காது கேட்கும். சிவில் என்ஜினியரான அவர், பாரதிராஜாவுடன் இணைந்து கட்டுமானத்தொழிலில் ஈடுபடுகிறார். ஒருநாள் கட்டிட வேலையின்போது விபத்து ஏற்பட்டு, பாரதிராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. உடனே அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இதையடுத்து அடுக்கடுக்கான பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. அந்த மருத்துவமனையில் லிஃப்ட் ஆபரேட்டர், மார்ச்சுவரி ஊழியர், வார்டு பாய், செக்யூரிட்டியாகப் பணியாற்றும் 4 பேர், தங்களது வேலை நேரம் ேபாக, வெளியே நடக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கின்றனர்.

ஒரு பிரச்னையில் அவர்கள் ஒரு பெண்ணைக் கொன்று லிஃப்ட்டில் கொண்டு வருவதைப் பார்த்துவிடும் அருள்நிதியின் அக்கா சுபத்ரா ராபர்ட்டின் மகள் மோனிகா சிவா, நால்வரையும் கண்டு நடுங்குகிறார். அவரைக் கொல்ல நால்வரும் முயற்சிக்க, இந்த விஷயத்தில் அருள்நிதி குறுக்கே வர, அனைவரையும் தீர்த்துக்கட்ட நால்வரும் முடிவு செய்கின்றனர். ஒரு டாக்டரை மிரட்டி, பாரதிராஜாவுக்கு விஷ ஊசி போட வைக்கின்றனர். இதனால் பாரதிராஜா உயிருக்குப் போராடுகிறார். இதைக் கண்டுபிடிக்கும் அருள்நிதி, நால்வரையும் என்ன செய்தார்? மோனிகா சிவாவின் கதி என்ன? நால்வரின் சமூக விரோத செயல்களுக்கு என்ன முடிவு என்பது மீதி கதை. ஒரு சராசரி இளைஞனாக வந்து, சமூக விரோதிகளின் செயல்களால் வெகுண்டெழுந்து, அவர்களைப் பொளந்து கட்டும் வேடத்தில் அருள்நிதி அட்டகாசமாக நடித்துள்ளார். படம் முழுவதும் ஒரு வார்த்தை கூட பேசாமல், முகபாவங்கள் மற்றும் பாடிலாங்குவேஜால் அனைத்து உணர்வுகளையும் ஆடியன்சுக்கு கடத்தியுள்ளார். ஆத்மிகாவுடன் கண்ணியமான காதல், குடும்பத்தினரிடம் அதிக அன்பு, தந்தை பாரதிராஜாவுக்காக பாசத்தில் துடிப்பது என்று, எல்லா ஏரியாவிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

ஒவ்வொரு சண்டையிலும் அடியை இடிபோல் இறக்கியுள்ள அவர், இறுதியில் நெகிழவைக்கிறார். ஆத்மிகா அழகு மட்டுமல்ல, இயல்பாகவும் நடித்துள்ளார். பாரதிராஜாவின் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. லிஃப்ட் ஆபரேட்டர் அஷ்ரப் தலைமையிலான வில்லன் கோஷ்டி அதிகமாக பயமுறுத்துகிறது. அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை துணிச்சலுடன் சொன்ன இயக்குனர் ஹரிஷ் பிரபு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசோ அல்லது மருத்துவமனை உயர் அதிகாரிகளோ கண்டுகொள்ளாதது ஏன் என்பது குறித்து யோசித்திருக்கலாம். பல காட்சிகள் லாஜிக் மீறலாக இருப்பதையும் கவனித்திருக்கலாம். சிண்டோ பொடுதாஸ் ஒளிப்பதிவு நேர்த்தி. சண்டை மற்றும் மருத்துவமனை காட்சிகளில் அதிக உழைப்பு தெரிகிறது. சாம் சி.எஸ் இசையில் வைரமுத்து எழுதிய ‘அப்பா’ பாடல் உருக வைக்கிறது. காட்சிகளுடன் பார்க்கும்போது பின்னணி இசை பொருந்துகிறது.

The post திருவின் குரல் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bharathiraja ,Arulnidhi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்