×

ருத்ரன் –திரை விமர்சனம்

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம், ‘ருத்ரன்’. டிராவல்ஸ் கம்பெனி நடத்தும் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் தம்பதியின் மகன் ராகவா லாரன்ஸ். தாயின் மீது அதிக பாசம் கொண்ட அவர், தனக்கு சாஃட்வேர் கம்பெனியில் வேலை கிடைக்க காரணமாக இருந்த பிரியா பவானி சங்கரை பார்த்ததும் காதலிக்கிறார். பிறகு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடக்கிறது. பிசினஸை விரிவுபடுத்த நண்பன் ஜெயக்குமாரை நம்பி 6 கோடி ரூபாய் கடன் வாங்கும் நாசர், திடீரென்று நண்பன் ஏமாற்றியதால் நிலைகுலைந்து மாரடைப்பால் உயிர் துறக்கிறார். தந்தைக்கு அவரது நண்பன் செய்த துரோகத்தை அறிந்த ராகவா லாரன்ஸ், வட்டியுடன் சேர்த்து 7 கோடி ரூபாய் கடன் இருப்பதை அறிந்து கலங்குகிறார்.

முதலில் டிராவல்ஸ் கம்பெனியை விற்று 3 கோடி ரூபாய் கடனை அடைக்கும் அவர், மீதியுள்ள 4 கோடி ரூபாய் கடனை அடைக்க, அதிக சம்பளம் கிடைக்கும் வேலைக்காக தாயையும், மனைவியையும் விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார். 6 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வருவதற்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில், திடீரென்று தாய் இறந்ததால் ஊருக்கு திரும்புகிறார் ராகவா லாரன்ஸ். முன்னதாக தன்னைப் பார்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து தனியாக ஊருக்கு திரும்பிய பிரியா பவானி சங்கர், விமான நிலையத்தில் இருந்து காணாமல் போனதை அறிந்து துடிக்கிறார். இதற்கெல்லாம் காரணம், பூமி என்கிற பிரபல தாதா சரத்குமார் என்பதை கண்டுபிடிக்கும் அவர், எதிரிகளை துவம்சம் செய்ய ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

அவரது வெறியாட்டத்துக்கு கிடைத்த விடை, 2ம் பாகத்துக்கான லீடாகவும் அமைந்துள்ளது. சில வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்சுக்கு படம் ரிலீசாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி வசனம் பேசும் அவர், சண்டைக்காட்சிகளில் வெடிகுண்டாக மாறியிருக்கிறார். அவரது ஆக்‌ஷன் ஆங்காங்கே ஓவராக இருப்பினும், கமர்ஷியல் படம் என்ற அளவுகோல் அதை மறக்கடித்து விடுகின்றன. அம்மாவிடம் பாசம், காதலியிடம் நேசம், மகளிடம் கொஞ்சல் என்று, ஆல் ஏரியாவிலும் மாஸ் காட்டிய ராகவா லாரன்ஸ், பாடல்களில் வித்தியாசமான ஸ்டெப்ஸ்களால் வியக்க வைக்கிறார். அப்பா, அம்மா வேடத்தில் நாசரும், பூர்ணிமா பாக்யராஜூம் நிறைவாக நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் வழக்கமான ஹீரோயின். இறுதியில் உயிருக்குப் போராடும் காட்சியில் உருக வைக்கிறார். ஈவிரக்கம் இல்லாத முழுநீள வில்லன் கேரக்டர் ஏற்றுள்ள சரத்குமாரின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

கிளைமாக்சில் அவரும், ராகவா லாரன்சும் மோதுவது, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு அட்டகாசமான தீனி. படத்தின் நீளம் அதிகம். நம்ப முடியாத ஆக்‌ஷன் காட்சிகள், மசாலா அம்சங்கள் என்று, பல படங்களில் பார்த்த பழிவாங்கும் கதையை தனது முதல் படமாக தேர்வு செய்ததை இயக்குனர் எஸ்.கதிரேசன் கவனித்திருக்க வேண்டும். ‘வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கிறேன் என்று இங்குள்ள தாய், தந்தையை தனியாக விட்டுவிடாதீர்கள்’ என்று மெசேஜ் சொன்னதற்காக அவரைப் பாராட்டலாம். கிளைமாக்ஸ், ‘காஞ்சனா’ படத்தை ஞாபகப்படுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஓ.கே. சாம் சி.எஸ் பின்னணி இசை வழக்கம்போல் ஆக்ரோஷமாக ஒலித்திருக்கிறது. கிளைமாக்ஸ் பாடலை வெறித்தனமாகப் படமாக்கியுள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது.

The post ருத்ரன் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Star ,S.Kathiresan ,Raghava Lawrence ,Nasser ,Poornima Bhagyaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...