சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தந்தை, மகனிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரக்காடு நிலப் பிரச்சனை, முந்தைய பகை குறித்து போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோரை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இருவரையும் தனித்தனியாக வைத்து விசாரணை மேற்கொள்கின்றனர். ஒரே கேள்விக்கு இருவரும் மாறுபட்ட பதிலை சொல்கிறார்களா, அல்லது ஒரே பதிலை சொல்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் தனியார் சோப்பு கம்பெனியின் ஆக்கிரமிப்பில் இருந்த 157 ஏக்கர் நிலத்தை, பத்திரஅதிகாரம் மூலம் சிலர் விற்க முயன்றுள்ளனர். இந்த இடத்தை விற்க ஆம்ஸ்ட்ராங் கட்சியில் உள்ள பி.டி.சேகர் என்பவர் உதவி புரிந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் 14 ஏக்கர் நத்தம் புறம்போக்கு எனப்படும் இடம் சம்பந்தமாக பிரச்சனை எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் ஒரு நபர் மூலம் அஸ்வத்தாமன், நிலத்தை விற்பவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. தங்களுக்கும் அதில் பங்கு வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்தில் ஆம்ஸ்ட்ராங் தலையிடவே, சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கிடம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கான முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் துருவித்துருவி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஸ்வத்தாமனிடம் எத்தனை முறை ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்தீர்கள், என்னென்ன பேசினீர்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகேந்திரனிடம் இந்த நிலப் பஞ்சாயத்து சம்பந்தமாகவும், சிறையில் இருந்தபடி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அவர் எவ்வாறு சதித் திட்டம் தீட்டினார், எவ்வாறு ஆட்களை ஒருங்கிணைத்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள ரவுடி சம்பவ செந்தில் மற்றும் சீசங் ராஜா குறித்தும் போலீசார் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளதாக தெரிகிறது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன், மகன் அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் துருவி துருவி விசாரணை: ஒரக்காடு நிலப் பிரச்னை, முந்தைய பகை குறித்தும் அடுக்கடுக்கான கேள்வி appeared first on Dinakaran.