×

மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்த விவகாரம்: பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்?

சென்னை: மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தின் நிரந்தர முதலீட்டாளர்களின் ரூ.525 கோடியை, மோசடி செய்த விவகாரத்தில், நிர்வாக இயக்குநராக உள்ள தேவநாதன் யாதவுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவரது சொத்து பட்டியலை தற்போது எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ‘தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ‘இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக’ நிறுவனரான தேவநாதன் யாதவ் உள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் முதியோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறப்பு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை முதலீட்டு பணத்திற்கு வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

அதன்படி இந்த நிதி நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இதை அந்த நிதி நிறுவனமே அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக முதலீட்டு பணத்தின் முதிர்வு பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை பல முறை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பிறகு கடைசியாக பாதிக்கப்பட்ட 144 பேர் தங்களது ரூ.24.5 கோடி பணத்தை பெற்று தர கோரி அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி மோசடி நிதி நிறுவனமான மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவநாதன் யாதவ் நடத்தும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் மற்றும் சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது 409, 420 உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்த 12ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று அச்சத்தில் தேவநாதன் யாதவ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜோஸ் தங்கைய்யா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையின் தீவிர வேட்டையில் புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதன் யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளான தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகளான குனசீலன், மகிமைநாதன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிடம் விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. மேலும், தேவநாதன் யாதவ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அதன் படி தான் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட போது தேவநாதன் யாதவ் பல கோடி ரூபாய் நிதி நிறுவனத்தில் இருந்து ரொக்க பணமாக எடுத்து தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அதோடு இல்லாமல் 150 ஆண்டு கால பழமையான மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதில் ஒரு பகுதியை தேவநாதன் யாதவ் அவர் நடத்தும் தனியார் தொலைக்காட்சி அலுவலகமாக மாற்றிக்கொண்டார். மேலும், நிதி நிறுவனத்தின் சொத்துக்களின் வருமானத்தையும் அவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் சிலர், நிதிநிறுவனத்தின் கட்டிடத்தின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தங்க கட்டிகள் தேவநாதன் யாதவ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றதாகவும், அதன் பிறகு 300 கிலோ தங்கம் குறித்து எந்த தகவலும் அவர் நிதி நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் கூட தெரிவிக்கவில்லை என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிடம் 300 கிலோ தங்கம் குறித்து விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காததால், 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் நிதி நிறுவன மோசடி தொடர்பாக சட்ட விதிகளின் படி, மோசடியில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது வழக்கம். அதன்படி தேவநாதன் யாதவ் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக அவரது சொத்து குறித்து பட்டியலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர். குறிப்பாக நிதி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பதவியேற்ற 2017ம் ஆண்டுக்கு பிறகு அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் முழுவதையும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை தேவநாதன் யாதவ் வாங்கி உள்ளார். அந்த கார் யார் பெயரில் வாங்கப்பட்டது. அதற்கான பணம் எங்கிருந்து வந்தது தொடர்பாகவும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்த விவகாரம்: பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்? appeared first on Dinakaran.

Tags : Mailapur Financial Institution ,BJP ,Devanathan Yadav ,Chennai ,Economic Crime Police ,Indian Permanent Deposit Fund Company ,Mayilapur ,Maylapur Financial Institution ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு:...