செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி: ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர் தூவப்பட்டது

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார். நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தார். செங்கோட்டையில் பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதனை தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றியதை அடுத்து ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் விழாவில், சமீபத்தில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்னைகள், பழங்குடியினர், விவசாயிகள், ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட சுமார் 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

கடந்த 2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து 11வது முறையாக செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்ற உள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகரின் அனைத்து எல்லைகளும் நள்ளிரவில் இருந்தே சீல் வைக்கப்பட்டுள்ளன. எந்த கனரக வாகனங்களும் டெல்லியில் நுழைய அனுமதியில்லை.

The post செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி: ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர் தூவப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: