×

64 அடி உயர தூக்கு தேர் கவிழ்ந்து விபத்து

கண்டாச்சிபுரம், ஆக. 15: 64 அடி உயர தூக்கு தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தில் பழமையான சூலபிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆடி மாதங்களில் தூக்கு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2022ம் ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு விநாயகர் கோயில் திடலில் இருந்து 64 அடி உயரம், 3 டன் எடை கொண்ட தூக்கு தேர் தயார் செய்யப்பட்டு, தேரில் சூலபிடாரியம்மனை வைத்து 300 வாலிபர்கள் தோள் மீது சுமந்து கொண்டு கடையம் கிராமத்தில் ஊர்வலமாக சென்றனர்.

நேற்று காலை தேர் நிலைக்கு வரும்போது, இடது பக்கமாக தேரை தூக்கி நடந்து வந்த வாலிபர்களின் கால் தெருக்களில் இருந்த தண்ணீரில் வழுக்கி எதிர்பாராதவிதமாக தேர் இடது பக்கம் சாய்ந்து மின்கம்பிகள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும், தேர் சாய்வதை பார்த்த பக்தர்கள் விலகி சென்றதாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் 2 பேருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து கவிழ்ந்த தேரை அரை மணி நேரத்திலே மீண்டும் எடுத்து தோளில் சுமந்து கொண்டு சூலபிடாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 64 அடி உயர தூக்கு தேர் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Chulapitariamman ,Kandachyam ,Villupuram district ,Dinakaran ,
× RELATED கண்டாச்சிபுரம் தாலுகா ஆபிசில் லஞ்ச...