சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): 78வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரை ஏற்போம்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இப்போதும் இந்தியா மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. எனவே, இந்திய மக்கள் முன்புள்ள பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு, அனைவருக்கும் வாய்ப்புகளை பகிர்ந்து, எல்லோரும் ஒன்றாக முன்னேறுவது இந்திய விடுதலைப் போராட்டத்தைப் போன்றே, இன்னொரு தவிர்க்க இயலாத போராட்டமாகும். நாட்டின் விடுதலையை தக்க வைத்துக் கொள்ள, விடுதலைப் போராட்டத்தின் பயன்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என சுதந்திர தின திருநாளில் சபதம் ஏற்போம்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற அரசியல் சுதந்திரத்தை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்பிடமிருந்து பெறும் பொருளாதார சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்ல அனைத்து இடதுசாரிகள் மற்றும் புரட்சிகர சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.
ஜி.கே.வாசன் (தமாகா): நாட்டின் 78வது சுதந்திர தினமானது இந்திய மக்கள் அனைவரின் வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பான முன்னேற்றத்திற்கும் வழி வகுக்க வேண்டும். சுதந்திரத்தைப் பெற்றுத்தரப் போராடிய, இன்னுயிர் நீத்த, தியாகம் செய்த முன்னோர்களையும், தலைவர்களையும், தியாகிகளையும், வீரர்களையும் நினைவு கூர்ந்து, வணங்குவோம்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, பல தியாகங்களை செய்து விடுதலை பெற்ற நாம், இப்போது மக்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதையும், அச்சமில்லா நல்லாட்சி கிடைப்பதையும் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): இந்திய நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் வாழ்க்கைச் சுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. வருங்காலத்தில் மாற்றம் அடைந்து ஒரு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகி அமைதியும், வளர்ச்சியும் அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வகுப்பு ஒற்றுமை ஓங்கவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர நாள் வழிவகுக்கட்டும்.
அன்புமணி (பாமக தலைவர்): ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற நாம், இப்போது இந்த தீமைகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. இந்தத் தேவைகளை புரிந்து கொண்டு இயற்கையை மதிக்கக்கூடிய இந்தியாவை உருவாக்கவும், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளையும் முற்றிலுமாக ஒழிக்கவும் இந்த நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): இந்த நன்னாளில் தேசத்தின் விடுதலைக்காகச் சாதி மத மாறுபாடுகளைக் கடந்து ஓர் அணியில் அரும் பெரும் தியாகங்களைச் செய்து விடுதலையைப் பெற்றுத் தந்த தியாக சீலர்களைப் போற்றுவோம். அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளான கருத்துரிமை. வழிபாட்டு உரிமை. பொருளாதார உரிமை மொழி உரிமை. மாநில உரிமை உள்ளிட்ட உரிமைகள் முழுமையாகக் காக்கப்பட இந்நன்னாளில் உறுதி எடுப்போம்.
இயேசு அழைக்கிறார் தலைவர் பால் தினகரன்: சுதந்திர தினம் நம் தேசத்திற்கு இரண்டு மடங்கு ஆசிர்வாதத்தைக் கொண்டு வரட்டும். தியாகிகளின் சேவைக்கேற்ற பலன் இரண்டு மடங்கு வரட்டும். சமாதானம் பெருகி, தேசத்தில் சுபிட்சமும், பெருக்கமும், செழிப்பும் உண்டாகட்டும். ஆட்சியாளர்கள் நல்லாட்சிக்குரிய வழிமுறைகளை பின்பற்றி, நாட்டில் உண்மையான சுதந்திரம் நிலவிட பணிபுரிய மனதுருகி பிரார்த்திக்கிறேன்.
இதேபோன்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமச்சந்திரன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள்(குலாலர்) தலைவர் சேம.நாராயணன் ஆகியோரும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும் கட்டிக் காத்திட சுதந்திர திருநாளில் சூளுரைப்போம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.