×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவியாளர் பணியிடத்துக்கு 180 பேருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொகுதி II-A பணிக்கான நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 180 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் 414 இளநிலை வரைதொழில் அலுவலர்கள், 33 உதவிப் பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III, 4 தணிக்கை உதவியாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திலும், 45 இளநிலை உதவியாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர்கள், 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 180 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர், நேற்றைய தினம் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவியாளர் பணியிடத்துக்கு 180 பேருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Highways Department ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Tamil Nadu ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுவரும்...