திட்டக்குடி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் சின்னபொண்ணு (50). இவரது மகன்கள் மணிகண்டன், மணிமாறன் இருவருக்கும் திருமணமாகி அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்துவிட்டதால் சின்னபொண்ணு திட்டக்குடியை அடுத்துள்ள வதிஷ்டபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து 5 மாதமாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மூத்த மகன் மணிகண்டன், நேற்று காலை தாயை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டி இருந்தது. மாற்றுச்சாவியால் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சின்னபொண்ணு ரத்த வெள்ளத்தில் கீழே இறந்து கிடந்தார். அருகில் 70 வயது முதியவர் ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தூக்கில் இறந்து கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியை சேர்ந்த சதாசிவம் (70) என்பதும், அப்பகுதியில் உள்ள பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்ததும், 2 மாதத்திற்கு முன் வயது மூப்பு காரணமாக வேலையில் இருந்து விலகியதாகவும் தெரியவந்தது. சின்னபொண்ணு மார்பு மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். கள்ளக்காதல் தகராறில் முதியவர் பெண்ணை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண்ணை கொன்றுவிட்டு முதியவர் தற்கொலை: கள்ளக்காதல் தகராறில் நடந்ததா? appeared first on Dinakaran.