சென்னை: தேசிய மகளிர் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பூ ராஜினாமா செய்துள்ளார். பாஜவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், இந்தப் பதவியை ராஜினாமா செய்தவர், கட்சியில் இருந்து விலகுவது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளார்.
இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பூ கடந்த 2020ம் ஆண்டு பாஜவில் இணைந்தார். அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் அவருக்கு பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி நியமிக்கப்பட்டார். அதில் இருந்து பெண்கள் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து வந்தார்.
இந்நிலையில் திடீரென எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஜூன் 28ம் தேதி ராஜினாமா கடிதத்தை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பினார். அதனை தொடர்ந்து ஜூலை 30ம் தேதி ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக துறை சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவருடைய கடிதத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் ஏற்றுக் கொண்ட நிலையில் நேற்று தேசிய மகளிர் ஆணைய பதவியில் இருந்து குஷ்பூ நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
குஷ்பூ எதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்ற தகவலை முறையாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ேமலும் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜவில் அவர் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. கட்சியிலும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதனால் கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனித்து இருந்து வந்தார். அதேநேரத்தில் தமிழக பாஜவும் அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்காமல் புறக்கணித்து வந்தது. இதனால் அவர் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒதுங்கியிருந்தார்.
மேலும், உடல் நிலையை காரணம் காட்டி மக்களவை தேர்தலில் பிரசாரம் செய்யாமல் விலகி இருந்தார். அதைப்போல் ேதர்தல் முடிந்த பிறகும் கட்சி பணியில் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியே இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலகினாலும் பாஜவில் நீடிக்கிறார். இந்நிலையில் கட்சியில் நீடிப்பாரா, இல்லையா என்ற அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பாஜவில் தொடர்ந்து புறக்கணிப்பால் விரக்தி; தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பூ ராஜினாமா appeared first on Dinakaran.