- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐ.ஐ.டி இயக்குனர்
- காமகொடி பெருமிதம்
- சென்னை
- ஒன்றிய கல்வி அமைச்சு
- நிறுவனம்
- NIRF
சென்னை: நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை என்ற பட்டியலை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) என்ற பெயரில் ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதல் இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் ஒட்டுமொத்த பிரிவில் 6வது முறையாக முதல் இடத்தையும், இன்ஜினியரிங் பிரிவில் 9வது முறையாக முதல் இடத்தையும் தக்க வைத்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இன்ஜினியரிங் பிரிவில் அடுத்த ஆண்டில் முதல் இடத்தை தக்க வைத்தால் ‘2 டிஜிட்’டை எட்டிப்பிடித்து விடுவோம்.
அடுத்த ஆண்டு என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் இதைவிட இமாலய வெற்றியை சென்னை ஐ.ஐ.டி. பெறும். நாட்டில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 100 மாணவர்களில் சுமார் 27 பேர் மட்டுமே உயர்கல்வியை படிக்கிறார்கள். பள்ளிப்படிப்பை முடிப்பவர்கள் அனைவரும் குறைந்தது இளநிலை படிப்புகளையாவது முடித்திருக்க வேண்டும். அதற்கான உன்னத நோக்கத்தோடு, அடுத்தகட்ட முயற்சியை சென்னை ஐ.ஐ.டி. தொடங்க இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கல்வி அமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. அதற்கு உதாரணம், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. விளையாட்டுத் துறையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பதை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கணிதம் தான் இன்ஜினியரிங் படிப்புக்கு அடித்தளம். கணித ஆசிரியர் சரியாக இருந்தால்தான் மாணவர்கள் சரியாக புரிந்து படிக்க முடியும். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் 500 நல்ல கணித ஆசிரியரை உருவாக்க வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பி.எட். படிப்பையும் விரைவில் தொடங்க உள்ளது. சிறந்த பல்கலைக் கழகங்கள் தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம் இடம் பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கல்வி அமைப்புகள் நல்ல நிலையில் உள்ளதால் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகம் : ஐஐடி இயக்குநர் காமகோடி பெருமிதம் appeared first on Dinakaran.