×

மயிலாப்பூர் நிதி நிறுவன ரகசிய அறையில் இருந்து மாயமான 300 கிலோ தங்கம் எங்கே என தேவநாதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

* வரும் 28ம் தேதி வரை சிறையில் அடைப்பு
* 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
* தேவநாதனின் நெருங்கிய கூட்டாளி தலைமறைவு

சென்னை: மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவன கட்டிடத்தின் ரகசிய அறையில் வைத்திருந்த 300 கிலோ தங்கம் மற்றும் நிரந்தர வைப்பு முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி பணம் எங்கே என்று கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிடம் 2வது நாளாக நேற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். மோசடிக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவான தேவநாதனின் நெருங்கிய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ‘தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட்’ என்ற பெயரில் இயங்கி வந்த நிதி நிறுவனத்தில் ஆண்டுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை முதலீட்டு பணத்திற்கு வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

அதன்படி இந்த நிதி நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக முதலீட்டு பணத்தின் முதிர்வு பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட 144 பேர் தங்களது ரூ.24.5 கோடி பணத்தை பெற்று தரக் கோரி அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து, நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவநாதன் யாதவ் நடத்தும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் மற்றும் சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது 409, 420 உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்த 12ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று பயத்தில் தேவநாதன் யாதவ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜோஸ் தங்கைய்யா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையின் தீவிர வேட்டையில் புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதன் யாதவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் தேவநாதனை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விடிய விடிய 2வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது தேவநாதன் யாதவ் அளித்த தகவலின் படி, நிதி நிறுவன மோசடிக்கு உடந்தையாக இருந்த தொலைக்காட்சி நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், தேவநாதன் யாதவிடம் நேற்று மாலை வரை நடத்திய விசாரணையில் வழக்கு தொடர்பாக பல தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது.

தேவநாதன் யாதவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனத்தின் முதலீட்டார்களின் வைப்பு நிதியை, சிவகங்கை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட போது அதற்கு பெரும்பாலான பணத்தை நிதி நிறுவனத்தின் சட்டத்திற்கு எதிராக, தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடுத்து செலவு செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர் நிதி நிறுவன பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து இருப்பதும், பல கோடி மதிப்பில் தி.நகரில் பிரமாண்டமாக பங்களா வீடு ஒன்று கட்டி இருப்பதும், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுதவிர தேவநாதன் யாதவ் நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், இதனால் அந்த இழப்பை ஈடு செய்ய நிதி நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் கையாடல் செய்து டிவியில் முதலீடு செய்து இருப்பதும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிதி நிறுவனத்தின் நிரந்தர வைப்பு நிதியாக உள்ள ரூ.525 கோடி பணம் எங்கே என்றும், கடந்த 5 ஆண்டுகளில் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் பல முறை மாற்றப்பட்டுள்ளது. அப்போதுதான் இந்த மோசடி அதிகளவில் நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதவிர தேவநாதன் யாதவ் இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகிப்பதற்கு முன்பு வரை, நிரந்தர முதலீட்டாளர்களின் பணத்தை முன்னாள் நிர்வாகிகள் தங்கத்தில் முதலீடு செய்து நிதிநிறுவனத்தின் கட்டிடத்தின் ரகசிய அறையில் 300 கிலோவுக்கு மேலான தங்க கட்டிகளை பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேவநாதன் யாதவ் நிர்வாக இயக்குநராக பொறுப்புக்கு வந்த பிறகு, நிதி நிறுவனம் இயங்கி வந்த கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் என்பதால், அதை புதுப்பிப்பதாக கூறி, சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தில் பல மாற்றங்கள் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தான் 300 கிலோ தங்கம் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே நிதி நிறுவனம் சார்பில் பல ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாத்து வந்த 300 கிலோ தங்கம் எங்கே என்பது குறித்தும் தேவநாதன் யாதவிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்கு பிறகு தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அதைதொடர்ந்து இந்த மூவரையும் நீதிபதி வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மூவரையும் சிறையில் அடைத்தனர்.

* மேலும் புகார்கள் குவிகின்றன
நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்த, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து வருகின்றனர். இதனால் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதேநேரம் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தேவநாதன் யாதவின் நெருங்கிய கூட்டாளி சாலமன் ேமாகன்தாஸ் என்பவரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post மயிலாப்பூர் நிதி நிறுவன ரகசிய அறையில் இருந்து மாயமான 300 கிலோ தங்கம் எங்கே என தேவநாதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Devanathan ,Mayilapur ,Chennai ,Maylapur ,
× RELATED சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி...