×

தமிழ்நாடு அரசு அறிவிப்பு 9 பேருக்கு நல்லாளுமை விருது

சென்னை: 78வது சுதந்திர தின விழாவை ஒட்டி 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களின் விவரம்: தரவு தூய்மை திட்டம் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியுடைய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டமைக்காக முதல்வரின் முகவரித்துறை தலைமை தொழில்நுட்ப அலுவலர் வனிதா, உயர்க்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை கணிசமாக உயர்த்தியமைக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சிகளின் வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்து செல்ல வழிவகை செய்துள்ளமைக்காக பொது நூலகங்கள் துறை இயக்குநர் இளம்பகவத் ஆகியோருக்கு நல்லாளுமை விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மூளைச்சாவு அடைந்த நபர்களிடம் இருந்து உறுப்பு கொடை பெற்று நடத்தப்படும் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மிகச்சிறப்பாக நடத்தி வருவதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபால கிருஷ்ணன், முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தாய்மார்களை உள்ளடக்கிய சுய உதவி குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திவ்ய தர்சினி, நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமையை புகுத்தியதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கும் நல்லாளுமை விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் வாயிலாக அரசு பள்ளி மாணவர்களை தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெற செய்தமைக்காக தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், நத்தம் நில ஆவணங்கள் அனைத்தையும் மின்னுருவாக்கம் செய்து இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கியமைக்காக நில அளவை மற்றும் நிலவரி திட்டத்தின் இயக்குநர் மதுசூதனன் ரெட்டி மற்றும் வரி ஆய்வு பிரிவு வாயிலாக ஒங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரி வருவாயினை பெருக்கியமைக்காக வணிகவரி ஆணையர் ஜகந்நாதன் ஆகியோருக்கும் நல்லாளுமை விருதுகள் வழங்கப்பட உள்ளன.

The post தமிழ்நாடு அரசு அறிவிப்பு 9 பேருக்கு நல்லாளுமை விருது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,78th Independence Day ,
× RELATED நாடு முழுவதும் 78வது சுதந்திர தின கொண்டாட்டம்