×

“தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என பெயரிடப்பட்ட தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை மலரை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் தயாரிக்கப்பட்ட 3 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு துறைகளிலும் நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைத் துறைவாரியாகத் தொகுத்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை மலரில் பல்வேறு பெருமக்களின் கட்டுரைகளாக, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி எழுதிய “தமிழ்நாட்டின் நலன்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது”, தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய, “விடியல் பயணம் ஒரு சமூக நீதித்திட்டம்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எழுதிய, “திராவிட மாடல் தத்துவமும் தனித்துவமும்”, பேராசிரியர் ராஜன் குறை எழுதிய “மூன்றாண்டு காலத்தில் முதன்மைச் சாதனைகள், வழக்கறிஞர் அருள்மொழி எழுதிய, ”வினைத்திட்பம்’ கொண்ட முதலமைச்சர்”, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி எழுதிய, “கல்விக் கட்டமைப்பில் உயரம் தொட்ட முதலமைச்சர்”, கனகராஜ் எழுதிய, “முற்றுகைக்கு மத்தியிலும் மூன்றாண்டு சாதனைகள்” ஆகிய கட்டுரைகளும், இம்மலரில் இடம் பெற்றுள்ளன.

பாராட்டு மொழிகளுடன், அழகிய வடிவமைப்புடனும், பல்வேறு வண்ணப் புகைப்படங்களுடனும் இந்த மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மலரை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் ஷோபனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* ‘கொள்கைகளும், சாதனைகளுமே துணை நிற்கும்’
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நாள்தோறும் திட்டங்கள் கொண்டு வந்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணத்தைத் “தலைசிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” என ஆவணப்படுத்தி, சாதனை மலராக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிற்சிறந்த அறிஞர் பெருமக்களது கட்டுரைகளுடன் வெளியாகியுள்ள இந்தக் கருத்துப் பெட்டகத்தை உங்களுடன் பகிர்கிறேன். நமது லட்சியப் பயணத்தில், கொண்ட கொள்கைகளும் – செய்யும் சாதனைகளுமே வாளாகவும் கேடயமாகவும் துணைநிற்கும்.

The post “தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என பெயரிடப்பட்ட தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Tamil Nadu Government ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Dravida Model Government ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...