×

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி கோட்டையில் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார்

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றுவார். அந்தந்த மாநில முதல்வர்கள் தலைநகரில் தேசியக்கொடியை ஏற்றி வைப்பார்கள். அதன்படி, தமிழகத்தின் தலைநகர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை கோட்டையில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கோடி ஏற்றி வைத்ததும், விழா மேடையில் தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த `தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருது மற்றும் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குமரிஅனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவிக்கிறார்.

அதேபோன்று, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிக்கிறார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்கிறார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைக்கிறார். இதையடுத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வர் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து தேசியக்கொடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துகிறார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசியக் கொடியேற்றுவதை முன்னிட்டு இரவு, பகல் என 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று தமிழகம் முழுவதும் சுதந்திர தின பாதுகாப்புக்காக சுமார் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் விஐபிக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

The post நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி கோட்டையில் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,78th Independence Day ,Abdul Kalam ,Kalpana ,Chawla ,Chennai ,Modi ,Delhi Fort ,Independence Day ,Chief Ministers ,Tamil Nadu ,St. George ,M.K.Stalin ,Kalpana Chawla ,
× RELATED தமிழர்கள் உயர்ந்த நிலைகளில்...