- முத்தராசன் திருடன்
- சென்னை
- அரசுத்தலைவர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- முதராசன்
- விடுதலை திருடல்
- இந்தியா
- Mutharasan
- திருடன்
சென்னை: விடுதலைப் போராட்டத்தின் பயன்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுதலை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் முகநூல் பக்கத்தில் கூறுகையில், இந்திய நாட்டின் 78வது விடுதலை திருநாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சியால் சுரண்டப்பட்டு, வளங்குன்றிய நிலையில் விடுதலை அடைந்த இந்தியா, படிப்படியாக தன்னை பல துறைகளிலும் வளர்த்துக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் இப்போதும் இந்தியா மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. உலகத்தில் கடும் பட்டினியில் உள்ள 15 நாடுகளில் ஒன்றாகவும், உலகத்திலேயே அதிக ஏழைகள் வாழும் நாடாகவும் இந்தியா இருப்பது கவலை அளிப்பதாகும்.
அதிலும் உலகப் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறிய பின்னும், இத்தகைய நிலை நீடிப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இந்தியாவின் 10 சதவீத மக்கள் செல்வ வளத்தில் திளைக்கும் போது, 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்பவர்களின் வருமானத்தை விட குறைவான வருவாயில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஆட்சியாளர்களின் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான பொருளாதாரக் கொள்கையால், இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊழல் பெரும் தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறது. சமூக சமத்துவமின்மையும், சாதிய ஏற்றத்தாழ்வும் பெரும் கேடுகளாக இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மதவெறி, வகுப்புவாத சக்திகள், இந்திய மக்களைத் தொடர்ந்து பிளவு படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்திய விடுதலைப் போராட்டத்தில், மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாய் களம் இறங்கி இந்திய மக்கள் போரிட்டார்கள். அந்த மகத்தான பாரம்பரியம் இப்போது உடைத்தெறியப்படுகிறது. வேலைப் பிரிவுகளின் படி உருவாக்கப்பட்ட சாதிய அடிப்படைகள், நவீன வளர்ச்சியில், நவீன வகையில் உருமாற்றம் அடைந்துள்ளது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதமாக, மக்களிடையே மதவெறி, சாதி வெறி, இனவெறி கூர் தீட்டப்பட்டு மறு கட்டமைப்பு செய்யப்படுகின்றன. ஜனநாயக சூழலில் ஆதிக்க சக்திகள் சாய்க்கப்படுவதற்குப் பதிலாக, புதிதாக வேர் விடுகின்றன.
நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், மின் உற்பத்தி உள்ளிட்டவற்றை வளர்த்து மேம்படுத்த ஐந்தாண்டு திட்டங்களை நாடு செயல்படுத்தி வந்தது. உலகப் பொருளாதார தேக்கத்துக்கு நடுவிலும், பொதுத்துறை நிறுவனங்களும் தேசமயமாக்கப்பட்ட வங்கிகளும், இந்தியாவை நிலை குலைய விடாமல் பாதுகாத்தன. இவை அனைத்தும் இப்போது தனியார் கைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்திய மக்களின் நலன்களையும், சுற்றுச்சூழலையும் பற்றிய அக்கறை ஏதுமின்றி, சுயலாப வேட்டையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
காற்றும், நீரும், நிலமும் மாசுபட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. நீர்நிலைகள் தூர்க்கப்படுகின்றன. இதனால் பருவ கால சுழற்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடும் வறட்சியும், பெரு மழையினால் அபாயகரமான வெள்ள, நிலச்சரிவு பாதிப்புகளும் அடுத்தடுத்து ஏற்படுகின்றன. கல்வியும், மருத்துவமும் பெருமளவுக்கு தனியாருக்குத் தரப்பட்டு வணிகமயமாக்கப்பட்டு விட்டன. தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு கூடுதல் லாபம் தரும் வகையில் கல்வி கடன் முறை கொண்டு வரப்படுகிறது. குடிமக்களின் வாழ்க்கையில் மேம்பாடு காண கல்வி இன்றியமையாததாக இருக்கும் சூழலில், பணம் இல்லை என்றால் கல்வி கற்க முடியாது என்ற நிலை படிப்படியாக இறுகி வருகிறது.
உலகத்திலேயே அதிநவீன மருத்துவ சிகிச்சைகளைத் தருகிற வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும், மருத்துவமனையில் செலுத்துவதற்கு பணம் இல்லாமல் காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண நோய்களால் பல லட்சம் பேர் மடிகின்றனர். இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஈடுபட்ட விவசாயத்துறை மேலும் மேலும் நலிவுக்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடுமையாக போராடியும், அவர்களது விவசாய உற்பத்தி பொருள்களுக்கு கட்டுபடியான விலை கூட மறுக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் கார்ப்பரேட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் விவசாய இடு பொருள்களின் விலை கடுமையாக உயர்த்தப்படுகிறது. விவசாயிகளுக்குத் தரப்பட்ட மானியங்கள் பெருமளவுக்கு குறைக்கப்பட்டு விட்டன.
செயற்கை உரங்களின் அதீதப் பயன்பாட்டின் காரணமாக நிலவளம் குன்றுகிறது. விவசாய உற்பத்தி குறைகிறது. நதிநீர்ப் பகிர்வு, நீர்ப்பாசனத் மேம்பாட்டு திட்டங்களில், ஒன்றிய அரசின் அக்கறையற்ற போக்கு காரணமாக விவசாயத்துக்கு அடிப்படையான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகிறது. தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு தரப்படும் விலையில்லா மின்சாரமும் கூட, ஒன்றிய அரசின் நிர்பந்தங்களால் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது.
சமூக இழிவுகளாலும், வருவாய் இழப்பாலும் விவசாயத் தொழிலாளர்கள், நகரங்களை நோக்கித் துரத்தப்படுகின்றனர். இதனால் உருவாக்கப்படும் நகரமயமாக்கம், பிரச்சனைகளின் கூர்மையை இன்னும் கூடுதலாக்குகிறது.வேலையில்லா திண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருகி உள்ளது.
தொழிலாளர்களுடைய உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. வேலையில் நிரந்தரத் தன்மை ஒழிக்கப்படுகிறது. வேலைக்கும், ஊதியத்துக்கும், சமூக பாதுகாப்புக்கும் இருந்த உத்தரவாதம் அகற்றப்பட்டுவிட்டது. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில், அவர்களது எதிர்காலம் இருள் மயமாக்கப்படுகிறது.இந்திய மக்கள் முன்புள்ள இவ்வளவு சவால்களையும் எதிர்கொண்டு, அனைவருக்கும் வாய்ப்புகளை பகிர்ந்து, எல்லோரும் ஒன்றாக முன்னேறுவது இந்திய விடுதலைப் போராட்டத்தைப் போன்றே, இன்னொரு தவிர்க்க இயலாத போராட்டமாகும்,இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று பல களப்பலிகளைத் தந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. நமது தாய் திருநாட்டின் விடுதலையை தக்க வைத்துக் கொள்ள, விடுதலைப் போராட்டத்தின் பயன்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என இந்த 78வது விடுதலைத் திருநாளில் சபதம் ஏற்போம்.அனைவருக்கும் மீண்டும் இந்திய விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விடுதலைப் போராட்டத்தின் பயன்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்: முத்தரசன் விடுதலை திருநாள் வாழ்த்து appeared first on Dinakaran.