×

திருச்சி எஸ்பிக்கு கொலை மிரட்டல்: சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு

திருச்சி: திருச்சி எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட 2 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான், சாட்டை துரைமுருகன், கார்த்திக் ஆகியோர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி எஸ்பியாக வருண்குமார் உள்ளார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை எஸ்பியாக உள்ளார். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ரவுடியிசம் ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு, சாதி கலவரங்களை உருவாக்குவோரை பிடித்து நடவடிக்கை எடுப்பது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி திருச்சி சிறுகனூர் அகரம் காட்டு பகுதியில் ரவுடி ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் (30) என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை (எ) துரைசாமி புதுக்கோட்டை அருகே கடந்த ஜூலை 9ம் தேதி என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

இதையடுத்து இரு எஸ்பிக்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கொலை மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக திருச்சி தில்லைநகர் போலீசில் எஸ்பி வருண்குமார் புகார் செய்தார். போலீசார் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், மிரட்டல் விடுத்தவர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த கண்ணன் (48), திருப்பதி (35) என்பதும், கண்ணன் நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளராகவும், திருப்பதி உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. இதில் மேலும் 41 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விருதுநகருக்கு சென்று கண்ணன், திருப்பதியை நேற்று கைது செய்து திருச்சி அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் 41 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கைதான 2 பேர் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் தூண்டுதலின்பேரில் எஸ்பி வருண்குமார், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப பெண்களுக்கு எதிராக வன்மமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். நாதகவை சேர்ந்தவர்கள், வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் சிலரை தூண்டி விட்டு கொலை மிரட்டல் பதிவுகளை போடுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

அதன்பேரில் வெளிநாட்டில் உள்ள சிலரையும் கண்காணித்து வருகிறோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவர் என்றனர். இந்நிலையில், கண்ணன், திருப்பதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தில்லைநகர் ேபாலீசார் எஸ்பி வருண்குமார், அவரது குடும்பத்தினர், மகன்களுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுக்க தூண்டியதாக சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியுபருமான திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post திருச்சி எஸ்பிக்கு கொலை மிரட்டல்: சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Trichy SP ,Seeman ,Shattai Duraimurugan ,Itumbavanam Karthik ,Trichy ,Thillanagar police ,Chattay Duraimurugan ,Karthik ,Varun Kumar ,Vandita ,Dinakaran ,
× RELATED மனைவி, குழந்தைகள் பற்றி ஆபாச பதிவு சீமான் மீது எஸ்.பி மானநஷ்ட வழக்கு