×

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பின் தலைவர் நா.விஜயராகவன் தமிழக முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனு: தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால் தியாகிகளின் மகன்கள், மகள்கள் இதனை பெற முடியாத சூழ்நிலை உள்ளது. சுதந்திர போராட்ட காலம் நிகழ்ந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் தியாகிகளுக்கு தற்போது 90 வயதில் இருந்து 100 வயதை கடந்திருக்கும்.

அவர்களது மகன், மகள்களுக்கு சுமார் 50 வயது முதல் 60 வயது வரை இருக்கும். ஆகவே, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அளிக்கப்படும் முன்னுரிமையை சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு அளிக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி வரும் உதவித்தொகையோடு மாநில அரசு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு சார்பில் நியமிக்கப்படும் அரசு துறை வாரியங்கள் மற்றும் ஆணையம் பொறுப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மருத்துவப்படியை ரூ.500ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி தர வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்கப்படும் வீட்டுமனை, காலிமனை ஒதுக்கீட்டில் தனியாக 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : struggle ,Chief Minister ,Chennai ,Tamilnadu ,Na.Vijayaraghavan ,Tamil ,Nadu ,Tamil Nadu government ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்