சென்னை: வணிகவரித் துறையில் வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த இரண்டு அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி தலா ரூ.1,00,000/- ஊக்கத்தொகை வழங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் (14.08.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது வணிகவரித்துறை வரி பகுத்தாய்வுப் பிரிவில்(Tax Research Unit) சிறப்பாக பணியாற்றி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த இராம்குமார், உதவி ஆணையர் (மாவ) மற்றும் முஹம்மது இர்ஃபான், மாநில வரி அலுவலர், ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,00,000/- காசோலையை அமைச்சர் வழங்கினார்கள்.
நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில் உள்ள வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலையத்தில், துறைசார்ந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வணிகவரி உதவி ஆணையர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த ஆறு உதவி ஆணையர்களை அமைச்சர் சந்தித்து பயிற்சியாளர்களிடம் பயிற்சி விவரங்களை கேட்டறிந்து, நல்ல முறையில் பயிற்சி பெற்று, சிறப்பாக பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் அனைத்து இணை ஆணையர்களும் தங்கள் கோட்டங்களை சார்ந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு செய்து, போலி பில் தயாரித்து வணிகம் செய்யும் நிறுவனங்களை கண்டறிதல், ரூபாய் 40 லட்சத்திற்கு மேல் தொழில் செய்வோர் விவரங்களை கண்டறிந்து GST வரம்பிற்குள் கொண்டுவருதல், தொடர்ந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தல், உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், இ.ஆ.ப., வணிகவரித்துறை ஆணையர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., இணை ஆணையர் துர்காமூர்த்தி, இ.ஆ.ப., வணிகவரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post வணிகவரித் துறையில் வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு அலுவலர்களுக்கு தலா ரூ.1,00,000/- ஊக்கத்தொகை வழங்கினார் அமைச்சர் மூர்த்தி..!! appeared first on Dinakaran.