×

காட்பாடியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 100 ஏக்கர் அரசு நிலத்தை விற்க தடை: 15 பேரிடம் விசாரிக்க முடிவு


* பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளதாக கடந்தாண்டு நடந்த தணிக்கையின்போது தெரியவந்தது. குறிப்பாக அரசுக்கு சொந்தமான 8.73 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பலருக்கும் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளையும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பொறுப்பு சார்பதிவாளராக இருந்த அலுவலர் சிவக்குமார் கடந்த ஜூன் 13ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், போலி ஆவணம் மூலம் தனிநபர்களுக்கு பதிவு செய்யப்பட்ட 8.73 ஏக்கர் அரசு நிலத்தை கண்டறிந்து மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை தான செட்டில்மென்ட் முறையில் தனியாருக்கு மோசடியாக பதிவு செய்து கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பான முழுவிவரங்களுடன், கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 100 ஏக்கர் அரசு நிலத்தை மீண்டும் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பில் இருந்த சிவக்குமார், சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட 2 கிராமங்களில் உள்ள 100 ஏக்கர் அரசு நிலத்தை 15 பேருக்கு தான செட்டில்மென்ட் முறையில் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 100 ஏக்கர் அரசு நிலங்களை மீண்டும் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலத்தை பதிவு செய்தவர்கள் அதை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. மேலும் இன்று(13ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும், முறைகேடாக நிலம் பதிவு செய்தது தொடர்பாக முதற்கட்டமாக 15 பேரிடம் தீவிர விசாரணை நடத்துவது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பேரில் அடுத்தக்கட்டமாக மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படும்’ என்றனர். போலி ஆவணங்கள் மூலம் 100 ஏக்கர் அரசு நிலத்தை பதிவு செய்த விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளதால், முக்கிய புள்ளிகள் மற்றும் உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

The post காட்பாடியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 100 ஏக்கர் அரசு நிலத்தை விற்க தடை: 15 பேரிடம் விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Gadpadi ,Registration Department ,Vellore ,Vellore District ,Katpadi Registrar ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்