×

பாஜக சார்பில் தேசியக் கொடியை ஏந்தி வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி


சென்னை: பாஜக சார்பில் தேசியக் கொடியை ஏந்தி வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி கோரி கடந்த 10ம் தேதி அளித்த மனுவை காவல்துறை நிராகரித்தது. இதையடுத்து, தேசிய கொடியுடன் இரு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க கோரி பாஜ கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு முன்னதாக விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என அரசின் விளக்கத்தை தெரிவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பேரணி நடத்தப்படுகிறது. பொதுநல நோக்கம் இல்லை. மேலும் தேசிய கொடி விதிகளின்படி கொடியை அவமதிக்கக் கூடாது. கடந்த 2023 மத்திய உள்துறை அமைச்சகம் கொடியை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் தவிர மற்றவர்களின் வாகனங்களில் தேசிய கொடியை பயன்படுத்தக்கூடாது.

பொதுமக்கள் வீடுகளில் கொடியை ஏற்றுவதற்கு தடைவிதிக்க முடியாது. பெரும்பாலான காவலர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது. சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது’ என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ‘இளைஞர்களிடையே சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வுக்காக பேரணி நடத்தப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசுக்கு எதிராக எந்த கோஷமும் எழுப்பப்படாது’ என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேசியக் கொடி ஏந்திய வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தெரிவித்த நீதிபதிகள் வாகன பேரணி நடத்த நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பேரணியில் பங்கேற்பவர்கள், வழித்தடம் குறித்த தகவல்களை பேரணி ஏற்பாட்டாளர்கள் காவல்துறைக்கு வழங்க வேண்டும். தேசிய கொடியை எடுத்துச் செல்பவர்கள் அதன் கண்ணியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் பேரணி நடத்தப்படும் சாலையின் அளவை பொறுத்து அனுமதி வழங்கப்பட வேண்டும்.

காவல்துறையினர், பேரணி எந்த வழியாக செல்கிறது என்ற விவரங்களை கேட்டு ஏதுவான பாதைக்கு அனுமதி வழங்க வேண்டும்; கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்; இருசக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்திருக்கும் நபர் தேசியக் கொடியை பிடித்துக் கொள்ள வேண்டும்’ என நிபந்தனை விதித்து நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

The post பாஜக சார்பில் தேசியக் கொடியை ஏந்தி வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,BJP ,Chennai ,Independence Day ,Tamil Nadu ,Bajaj ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை