×

தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருதிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (14.8.2024) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்தித்து, புதுடில்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பால் 2022-23-ஆம் பருவத்தில் தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான முதல் பரிசிற்கான விருதினை தர்மபுரி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், தேசிய அளவில் சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசிற்கான விருதினை கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் வழங்கப்பட்டதையொட்டி, அவ்விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் செயல்படும் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளை மேம்படுத்திடவும், கரும்பு விவசாயப் பெருமக்களின் நலன் காக்கவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் துறை சர்க்கரை ஆலைகள், என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. 2023-24-ஆம் அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் அரவையை மேற்கொண்டுள்ளன.

கரும்பு விவசாயிகள் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கரும்பு விலையை வழங்கிட சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைக் கடனாக சுமார் 1224.36 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது. 2023-24-ஆம் அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ. 215 /- சிறப்பு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் புதிய கரும்பு இரகங்கள், பருசீவல் நாற்றுகள்,

தோகை தூளாக்குதல், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கரும்பு அபிவிருத்தப் பணிகளுக்காவும், ஆலைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் சுமார் ரூ.13.27 கோடி நிதியுதவி செய்துள்ளது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைமின் உற்பத்தித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவ்வரசு 1.10.2022 முதல் சுமார் 35 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கி தொழிலாளர்களின் நலன்காக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நலிவடைந்த நிலையிலிருந்த சர்க்கரை ஆலைகள் மீண்டும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

புதுடில்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைக் கண்டறிந்து விருது வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2022-23-ஆம் பருவத்தில் தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையாக தர்மபுரி மாவட்டம், கோபாலபுரத்தில் செயல்படும் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசைப் பெற்றுள்ளது. மேலும், தேசிய அளவில் சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசை கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையத்தில் செயல்படும் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக சர்க்கரை ஆலைகள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., சர்க்கரைத்துறை இயக்குநர் த. அன்பழகன், இ.ஆ.ப., சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Nationwide ,Mills ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,Mu. K. Stalin ,Chief Secretariat, ,Minister of Agriculture and Welfare ,M. R. K. The Paneer Selvam ,Nationwide Cooperative Sugar Mills ,Dinakaran ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...