×

திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.8.2024) தலைமைச் செயலகத்தில், திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார். திராவிட மாடல் அரசு 2021ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்து; நான்காம் ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான பல திட்டங்களைச் செயல்படுத்திப் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

திராவிட மாடல் அரசு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, பல்வேறு புதுமையான திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு, இந்திய அளவில் படைத்துள்ள சாதனைகள் ஒன்றிய அரசின் நிதிஆயோக் – நிர்யாத் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் நாட்டிற்குப் பறைசாற்றியுள்ளன.  அதாவது, தமிழ்நாடு இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதல் மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முதலிடம், ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் முதலிடம், மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம், மகளிர் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடம், கர்ப்பிணிப் பெண்கள் சுகதாரத்தில் தமிழ்நாடு முதலிடம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம், மகப்பேற்றுக்குப் பிந்தைய சிசு கவனிப்பில் முன்னணி மாநிலம்,

வேளாண் உற்பத்தியில் முன்னணி மாநிலம், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தலைசிறந்த மாநிலம், மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், பொறியியல் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இரண்டாம் இடம், தொழில் வளர்ச்சிக்கான 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் போன்ற சாதனைகளை படைத்து வருகிறது. இவை குறித்துச் சான்றோர்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் பாராட்டி வருகின்றன. இவையல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் தெலுங்கானா மாநிலத்திலும், கனடா நாட்டிலும் பின்பற்றப்படுகின்றது.

இந்த அரசின், “நான் முதல்வன்” போன்ற வேறு பல திட்டங்களும் இந்திய அளவிலும், வெளிநாட்டிலும் புகழ் பரப்பிவரும் சூழ்நிலையில், திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு துறைகளிலும் நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைத் துறைவாரியாகத் தொகுத்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை சிறப்பாகத் தயாரித்துள்ளது. இச்சாதனை மலரில் பல்வேறு பெருமக்களின் கட்டுரைகளாக, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி எழுதிய “தமிழ்நாட்டின் நலன்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது”.

தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் எழுதிய, “விடியல் பயணம் ஒரு சமூக நீதித்திட்டம்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் எழுதிய, “திராவிட மாடல் தத்துவமும் தனித்துவமும்”, பேராசிரியர் ராஜன் குறை அவர்கள் எழுதிய “மூன்றாண்டு காலத்தில் முதன்மைச் சாதனைகள், வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் எழுதிய, “வினைத்திட்பம்’ கொண்ட முதலமைச்சர்”, கல்வி ஆலோசகர் திரு.ஜெயபிரகாஷ் காந்தி அவர்கள் எழுதிய, “கல்விக் கட்டமைப்பில் உயரம் தொட்ட முதலமைச்சர்”, திரு.கனகராஜ் அவர்கள் எழுதிய, “முற்றுகைக்கு மத்தியிலும் மூன்றாண்டு சாதனைகள்”, பத்திரிகையாளர் திரு.திலீப் மண்டல் அவர்கள் எழுதிய, “ஒருங்கிணைந்த வளர்ச்சியும் சமூக நீதியும் தமிழ்நாட்டின் திராவிட மாடல்”, பத்திரிகையாளர் சங்கீதா கந்தவேல் அவர்கள் எழுதிய,

“பெண்களுக்கான மேம்பாட்டுக்கு வழிகோலும் திராவிட மாடல்”, பத்திரிகையாளர் திரு.அருள் எழிலன் அவர்கள் எழுதிய, “தமிழ்நாட்டைப் பின்தொடரும் இந்தியா” ஆகிய கட்டுரைகளும், இம்மலரில் இடம் பெற்றுத் தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளன. இத்தகைய பாராட்டு மொழிகளுடன், அழகிய வடிவமைப்புடனும், பல்வேறு வண்ணப் புகைப்படங்களுடனும் இந்த மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ. ஷோபனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M.K. Stalin ,Dravida Model Government ,Public Relations Department ,Tamil Nadu Government ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...