×

நானூறும் நாலடியும்

ஓரிடத்தில் பஞ்சம் பரவியது. அதன் விளைவாக மற்றோர் இடத்தில் அறக் கருத்துக்களும், அறிவுக் கருத்துக்களும் பரவின. வட நாட்டில் ஆரம்பித்து தமிழ் நாட்டில் முடிந்த வரலாறு அது. ஒரு காலத்தில், வட நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகள் மழையின்றி பஞ்சம் வாட்டியது. ஆனால், எண்ணாயிரம் சமண முனிவர்கள் அங்கிருந்து புறப்பட்டு தமிழகம் வந்தார்கள். வந்தவர்கள், பாண்டிய நாட்டு மன்னரைச் சந்தித்து தங்கள் நிலைமையை விவரித்தார்கள். ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள்!’’ எனச் சொன்னார் மன்னர்; கூடவே அவர்களுக்குத் தேவையானஅனைத்து ஏற்பாடுகளும் செய்தார். மன்னரின் அனுமதி கிடைத்ததும் சமணர்கள், மதுரையைச்சுற்றியுள்ள மலைகளில் வாழத் தொடங்கினார்கள்.

அவர்கள் எல்லோரும், ‘‘ஏதோ வந்தோம்! உண்டோம்! உறங்குவோம்!’’ என்று பொழுதைக் கழிக்கவில்லை. அத்தனை நபர்களும் முனைந்து தமிழைக் கற்றார்கள். அதிவிரைவாகப் பெரும் புலவர்களாக ஆனார்கள். பெரும் புலவர்களான அவர்கள், பாண்டிய மன்னரின் அவைக்களப் புலவர்களாகவும் ஆனார்கள். அரும்பெரும் தமிழ் நூல்களை எழுதி தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றினார்கள். அந்தச் சமண முனிவர்களால் உருவான நூல்களில் ‘நாலடியார்’ முக்கியமான இடம் பெறுகிறது. நாலடியார் உருவானதைக் குறித்து, ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

பஞ்சத்தால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த சமணர்கள், தங்கள் வட நாட்டில் மழை பொழிந்து பஞ்சம் தீர்ந்துவிட்டது என்ற தகவலைச் சொல்லி, ‘‘மன்னா! நாங்கள் பழையபடி எங்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றார்கள். மன்னருக்கோ, கற்றவர்களும் தவசீலர்களுமான அந்தச் சமணர்களைப் பிரிய மனமில்லை; ‘‘பல ஆண்டுகளாக நம் அரசவையில் பெரும் புலவர்களாக இருந்து, பற்பல அறிவு – அறநூல்களைத் தந்த இந்தப் புலவர்களை எப்படிப் பிரிவது?’’ என்று வருந்தினார்; அனுமதி அளிக்கவில்லை; பதிலேதும் சொல்லவில்லை. நாட்டுப் பற்று மிகுந்த சமணர்களோ, தங்கள் நாட்டிற்குத் திரும்புவதில் உறுதியாக இருந்தார்கள். அன்று இரவே தம் நாட்டிற்குப் புறப்படத் தயாரானார்கள். மன்னர் அனுமதி தராவிட்டாலும், சமண முனிவர்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பியதும், ஒரு முடிவு எடுத்தார்கள். இரவு நெருங்கியது.

சமண முனிவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாடலாக ஓலையில் எழுதி, தங்கள் இருக்கைகளுக்கு அடியில் வைத்துவிட்டு, இரவோடு இரவாக அவ்வளவு பேர்களும் மதுரையை விட்டு வெளியேறினார்கள். மறுநாள் பொழுது விடிந்ததும், அரசர் விவரம் அறிந்தார். சமண முனிவர்கள் தங்கியிருந்த இடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்தார். ஒவ்வொருவர் இருக்கையின் அடியிலும் ஒவ்வொரு பாடல் எழுதிய ஓலைச்சுவடி இருந்தது. அப்பாடல்களை எல்லாம் சேகரிக்கச் செய்த மன்னர், புலவர்களிடம் அப்பாடல்களைத் தந்து, ‘‘என்னவென்று பாருங்கள்!’’ என்றார். ஒரு பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. உடனே மன்னர், ‘‘இந்த ஏடுளையெல்லாம் அப்படியே தூக்கி, ஆற்று வெள்ளத்தில் வீசுங்கள்!’’ என்றார்.

சேவகர்களும் அந்த ஏடுகளை எல்லாம் தூக்கி, ஆற்று வெள்ளத்தில் வீசினார்கள். அவ்வாறு எறியப்பட்ட ஏடுகளில், நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்துக் கரையேறின; ஒதுங்கின. அதைப் பார்த்த மன்னர் வியந்து, அந்த ஏடுகளை எல்லாம் பதுமனார் எனும் பெரும் புலவரிடம் சேர்த்தார். பதுமனார் அப்பாடல்களை எல்லாம் நிதானமாகப் பரிசோதித்துப் பார்த்தார். அந்தப் பாடல்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பொருத்தமானதாக அமைந்திருந்தன.

உடனே பதுமனார், அப்பாடல்களை வகைப்படுத்தித் தொகுத்தார். அவ்வாறு தொகுக்கப்பட்ட அந்த நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் நான்கு வரிகள் கொண்ட வெண்பாப் பாடல்களாக இருந்தன. அதன் காரணமாக, அந்நூலுக்கு ‘நாலடி நானூறு’ எனப் பெயர் சூட்டினார். தானே அதற்கு விளக்கமான உரையும் எழுதினார். ‘வேளாண் வேதம்’ என்று பெயர் சூட்டிப் போற்றினார். ‘‘இந்நூலில் உள்ள நானூறு பாடல்களும் வேத உண்மையாகும். வாழ்வுக்கு வழி வகுக்கும் மொழிகளாகும்’’ என்றார்.

“நானூறும் வேதமாம் நானூறும் நன்னூலாம்
நானூறும் கற்றற்கு நற்றுணையாம் – பதுமனார்
மன்னன் வழுதியர் கோன் வையைப்பேர் ஆற்றினிடை
எண்ணி இரு நான்கோடு ஆயிரவர் – நண்ணி
எழுதியிடும் ஏட்டுக்குள் ஏடு எதிரே ஏறும்
பழுதில்லா நாலடியைப்பார்’’
– எனும் பழைய பாடல், ‘நாலடி நானூறு’ தோன்றிய வரலாற்றை விளக்கும்.

“பழந்தமிழ் சொல்லருமை நாலிரண்டில்
வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்
எல்லோரும் கூடி எடுத்துரைத்த – சொல்லாய்ந்த
நாலடி நானூறு நன்கினிதா என் மனத்தே
சீலமுடன் நிற்கத் தெளிந்து’’
– என்பவைகளில் நாலடியாரின் உயர்வு விளங்கும்.

நாலடியாரில் இருந்து ஒருசில தகவல்கள்

அடுத்தவர்கள் தம்மை இகழ்ந்து பேசினாலும், உயர்ந்தவர்கள், அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்; பதிலுக்கு அவர்களை இகழ்ந்து பேச மாட்டார்கள் – இவ்வாறு சொல்லும் நாலடியார், ஓர் அழகான உவமையால், இதை மேலும் மெருகேற்றி மனதில் பதிய வைக்கிறது. ‘‘கோபம் கொண்ட நாய் ஒருவனைக் கவ்விக் கடித்தது. அதற்காக அவன் நாயைத் திருப்பிக் கடிப்பது இல்லையல்லவா? அதுபோல, அடுத்தவர்கள் தம்மை இகழ்ந்து பேசினாலும், மேன்மக்கள் கோபப்பட மாட்டார்கள்; பதிலுக்கு அவர்களை இகழ்ந்து பேச மாட்டார்கள்’’ என்கிறது நாலடியார்.

“கூர்த்து நாய் கௌவிக் கொளக்கண்டும் தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றி
கீழ் மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ?
மேன் மக்கள் தம் வாயால் மீட்டு’’

முற்பிறவியில் செய்த வினை, தவறாமல் வந்து பிடிக்கும்; பீடிக்கும் – எப்படி என்பதற்கு ஓர் எளிதான உதாரணம் சொல்லி, நம் மனதில் பதிய வைக்கிறது நாலடியார். மந்தையில் ஏராளமான மாடுகள், கூட்டமாக நின்று மேய்கின்றன. அவற்றில் கன்றை ஈன்ற பசுக்களும் இருந்தன. தாய்ப்பசுவைத் தேடிக் கதறிய கன்று ஒன்றை அக்கூட்டத்திற்குள் ஓட்டினால், அந்தக்கன்று மிகச்சரியாகத் தன் தாய்ப்பசுவைத்தேடிக் கண்டு கொள்ளும். அதுபோல, ஒருவன் முற்பிறவியில் செய்த வினை, தவறாமல் மறு பிறவியில் வந்து அவனைப் பிடிக்கும். ஆழமான தகவலை – எளிமையான உதாரணத்தின் மூலம் நம் மனதில் பதிய வைக்கும் நாலடியார் பாடல்:

“பல் ஆவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய் நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழ வினையும் அன்ன தகைத்தே தற்செய்த
கிழவனை நாடிக் கொளற்கு’’

மிகவும் உயர்ந்ததான, இனிமையான வாழ்வை, ‘‘சொர்க்க போகம்’’ என்போம். நாலடியார், சொர்க்க உலக வாழ்வைவிட உயர்ந்ததான ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறது. நற்கல்வி கற்று நற்குணங்களை உடையவர்கள், பகை இல்லாதவர்கள், கூர்மையான அறிவு படைத்தவர்கள் – இப்படிப்பட்டவர்களுடன் இருந்து கலந்து மகிழ்வது, சொர்க்க போகத்தைவிட
இனிமையானது – என்கிறது நாலடியார்.

“தவலரும் தொல் கேள்வித்தன்மை உடையார்,
இகலிலர், எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல் வானத்து
உம்பர் உறைவார் பதி’’

நல்லறிவு படைத்தவர்களுடன் இவ்வாறு கலந்துபேசி மகிழச்சொன்ன நாலடியார், ‘செவிடனாக இரு! குருடனாக இரு! ஊமையாக இரு!’ என்றும் சொல்கிறது. பிறர் பேசும் ரகசியங்களைக் கேட்பதில், செவிடனாக இருக்க வேண்டும்; மாற்றான் மனைவியைக் காண்பதில் குருடனாக இருக்க வேண்டும்; பிறரைப்பற்றிப் புறம் கூறுவதில் – கோள் சொல்வதில் ஊமையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நல்லொழுக்கங்களை உடையவனுக்கு, எந்த அறத்தையும் எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறும் நாலடியார் பாடல்;

“பிறர் மறையின் கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இற்கட் குருடனாய்த் தீய
புறங் கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங் கூற வேண்டா அவற்கு’’

அரும்பெரும் அறக்கருத்துக்கள் நானூறு கொண்ட நாலடியார் மக்கள் மத்தியில் பரவினால், மனம் தூய்மை பெறும்! வாழ்வு உயர்வு பெறும்!

– பி.என்.பரசுராமன்.

The post நானூறும் நாலடியும் appeared first on Dinakaran.

Tags : North ,Tamil ,
× RELATED வட ஆந்திராவில் மீண்டும் கனமழை...