×

சென்ைன மாநகராட்சியில் வருவாய்த்துறை சேவைகளுக்கு கியூஆர் கோடு அறிமுகம்

சென்னை, ஆக.14: சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வருவாய்த் துறையால் வழங்கப்படும் புதிய, மறு மதிப்பீடு, சொத்து வரி மதிப்பீடு, சொத்து வரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை பொதுமக்கள் அறியும் வகையிலான விரைவு தகவல் குறியீடு (கியூஆர் கோடு) தொழில்நுட்பப் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் எனவும், வருவாய்த் துறையால் வழங்கப்படும் புதிய, மறு மதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பயனாளர்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து நகல் எடுக்க வழிவகை ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், சென்னை மாநகராட்சியின் சமூகநலக் கூடங்களை முன்பதிவு செய்யும் முறையை இணையவழி வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில், வருவாய்த்துறையில் கியூஆர் கோடு தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்தல் மற்றும் சமூக நலக் கூடங்களை இணையவழி வாயிலாக முன்பதிவு செய்தல் ஆகிய அறிவிப்புகளை செயல்படுத்தும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில், மேயர் பிரியா பங்கேற்று, புதிய சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

அதேபோன்று, இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடங்கி வைக்கும் விதமாக, முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில், சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பள்ளி தேசிய மாணவர் படை மாணவ, மாணவியரில் எம்.எச்.சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 மாணவிகள், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவிகள் மற்றும் பந்தர் கார்டன் சென்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள், எம்.ஜி.ஆர். நகர் சென்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள் உள்ளிட்ட 400 தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ₹11,82,300 மதிப்பிலான சீருடைகளை மேயர் பிரியா நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், கூடுதல் ஆணையர் லலிதா, இணை ஆணையர் விஜயா ராணி, நிலைக்குழு தலைவர்கள் த.விசுவநாதன், சர்பஜெயாதாஸ் நரேந்திரன், மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்ைன மாநகராட்சியில் வருவாய்த்துறை சேவைகளுக்கு கியூஆர் கோடு அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Chennai ,Revenue Department ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...