சென்னை, ஆக.14: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கடற்கரை நகரமான சென்னை புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரமாகவும், சில பகுதிகள் கடல் மட்டத்தை விட தாழ்வாகவும் உள்ளன. இதனால், சென்னையில் மிதமான மழை பெய்தாலே, சாலையெங்கும் தண்ணீர் தேங்குவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இதை தடுக்கும் வகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதன் மூலம், சமீபத்தில் சென்னையில் மிதமான மழை பெய்தபோது, ஒரு சொட்டு தண்ணீர் தேங்காத அளவுக்கு விரைந்து வெளியேறியது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோன்று கழிவுநீர் குழாய்கள், பாதாள சாக்கடை என அனைத்தும் மாற்றி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்காகவும் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. மேலும் மின்வாரிய பணிகளும் இதேபோன்று நடைபெற்று வருகிறது. இதனால், இந்த ஆண்டு மழைநீர் விரைந்து வெளியேறுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், ஆறு, ஏரி மற்றும் குளங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், ‘‘சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக மாநகராட்சி சார்பில் வெள்ளக்கசடு தணிப்பு, பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்துள்ேளாம். இந்த ஆண்டு கவுன்சிலர்கள் குறுகிய தெருக்களிலும் வடிகால் கட்டுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். 3 அடிக்கு 3 அடி என்ற அளவில் வடிகால் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
நகரில் 33 முக்கிய கால்வாய்கள் உள்ளன. இவற்றில் நீர்மட்டம் உயரும்போது ஓடை நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இதை தவிர்க்க அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளது. இவை தண்ணீரை நன்றாக வெளியேற்ற உதவும். நீர் வளத்துறையும் சகதிகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நாள் முழுவதும் பஸ் ரூட் சாலைகள் மாற்று வழிகள், கால்வாய்கள் சுரங்கப்பாதைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுரங்கப்பாதைகளில் நீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டினால் சென்சார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்யும். உடனே அந்த பகுதி அதிகாரிகளை ஒருங்கிணைத்து பிரச்னைகளை தீர்க்க இது உதவும்.
கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் 45 செ.மீ. மழை பெய்தது. இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் சமாளிக்கும் வகையில் சென்னை முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கிறது. அவர்களுடன் ஒருங்கிணைந்து மோட்டார்கள் ஏற்பாடு செய்வது, வடிகால்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஓஎம்ஆர் சாலையில் தண்ணீர் தேங்கியது. இந்த ஆண்டு தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சென்னையில் மழை பாதிப்புகளை தடுக்க, அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து, 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தயார்,’’ என்றார்.
The post சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.