×

எதிர்கால கனமழையை தாங்கும் திறன் கொண்டதாக ஒக்கியம் மடுவு பாலம் கட்டமைக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: ஒக்கியம் மடுவு பாலம் எதிர்கால கனமழையைத் தாங்கும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2023ல் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்னையை எடுத்துக்காட்டுகிறது. அதிக மழைப்பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

நீர்வளத் துறையின் வேண்டுகோளின்படி, இந்த முக்கியமான பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அகலமான நீர்வழிப்பாதையுடன் புதிய பாலம் கட்டிய பின்னர், தற்போதுள்ள பாலத்தை இடித்து அகற்றும் பணியும் இதில் அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த முக்கியமான நீர்வழிப்பாதை பற்றிய பொதுமக்களின் அக்கறையை கருத்தில் கொண்டு, தற்போதைய இந்த பணி மழைநீர் வெளியேற்றும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஒக்கியம் மடுவுக்கு குறுக்கே நீர்வழிப்பாதையை 200 மீட்டராக அகலப்படுத்தும் சாலைப் பணியாகும்.

இதனால் எதிர்வரும் பருவமழையில் அதிகரிக்கப்பட்ட நீர்வழிப்பாதை கொண்ட பாலம் தயாராகும். அடுத்தாண்டு பருவமழைக்கு முன் இந்தப் பணியை முடித்து, ஒக்கியம் மடுவு பாலம் எதிர்கால கனமழையை சிறப்பாக தாங்கும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்படும். தற்போதுள்ள பணிகள் எதிர்வரும் பருவமழைக்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நீர்வழிப்பாதை மடுவு அடித்தள நிலை வரை சரிசெய்யப்படும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post எதிர்கால கனமழையை தாங்கும் திறன் கொண்டதாக ஒக்கியம் மடுவு பாலம் கட்டமைக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Okkyam Madu Bridge ,Metro Administration ,CHENNAI ,Okkyam Maduvu Bridge ,Cyclone Mikjam ,Dinakaran ,
× RELATED விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில்...