×

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு மெத்தனால் வரும் இடம் கண்டுபிடிப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பா.ம.க, பா.ஜ, சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகினர்.

அப்போது, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்வதை தவிர உண்மை குற்றவாளிகளை கைது செய்வதில்லை. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த சம்பவத்துக்கு பின், காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி, மெத்தனால் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிந்து தடுத்திருந்தால் தற்போது 68 பேர் மரணம் தடுக்கப்பட்டிருக்கும் என்றார்.

காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்கப்படும் நிலையில், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க தகுதியில்லை என்பதால் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மெத்தனால் எங்கிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரகசியமானவை. புலன் விசாரணை அதிகாரியின் ரகசிய அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

பா.ம.க. வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ஆண்டுதோறும் இதுபோல் தொடர்வதால், அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும். கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்படுவதால், இதுகுறித்து சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று வாதிட்டார். இதையடுத்து, அரசுத்தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு மெத்தனால் வரும் இடம் கண்டுபிடிப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,AIADMK ,ADMK ,BJP ,Kallakurichi ,CBI ,Chief Justice ,D. Krishnakumar ,Justice ,PP Balaji ,Dinakaran ,
× RELATED ஆதார் விவரங்களை கேட்டு சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு தொந்தரவு!!