திருவனந்தபுரம்: கடந்த 2017ம் ஆண்டு ஒரு பிரபல மலையாள முன்னணி நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த நடிகையின் முன்னாள் டிரைவரான சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தியது. இதன்பின் கடந்த 2019ம் ஆண்டு கேரள முதல்வரிடம் விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட அரசுக்கு உத்தரவிடக் கோரி தகவல் உரிமை சட்டத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தகவல் உரிமை ஆணையம், ஹேமா கமிஷன் அறிக்கையை உடனடியாக வெளியிட உத்தரவிட்டது. இந்நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரான சஜிமோன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
The post மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.