×

புதுச்சேரி-கடலூர் சாலையில் ‘பஸ் ரேஸ்’ தனியார் பேருந்தை வழிமறித்து இயக்குநர் சேரன் வாக்குவாதம்: ஹாரனை தொடர்ந்து அடித்ததால் கடுப்பு

ரெட்டிச்சாவடி: தொடர்ந்து ஹாரண் அடித்ததால் தனியார் பஸ் டிரைவருடன் இயக்குநர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  புதுச்சேரியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று கடலூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதன் பின்னால் மற்றொரு தனியார் பேருந்து வந்தது. இந்த 2 பேருந்துகளும் போட்டி போட்டு தொடர்ந்து ஏர் ஹாரனை பயன்படுத்தியபடி வேகமாக வந்தன.  இந்த பேருந்துகளுக்கு முன் புதுச்சேரியில் இருந்து நடிகரும், இயக்குநருமான சேரன் காரில் படப்பிடிப்புக்காக கடலூர் சென்று கொண்டிருந்தார்.

தமிழக எல்லையான பெரியகங்கணாங்குப்பம் அருகே வந்த போது சேரனின் காருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து டிரைவர் தொடர்ந்து ஏர் ஹாரன் அடித்தபடியே வேகமாக சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சேரன் சாலையின் நடுவே காரை நிறுத்தி, தனியார் பேருந்து ஓட்டுநரிடம், ‘ஏன் இவ்வளவு வேகமாக ஹாரன் அடித்தபடி வருகிறீர்கள், சாலையில் இடம் இருந்தால் வழி விட்டு சென்றிருப்போம். வழி இல்லாத சூழ்நிலை உள்ளது. அதை புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டு இருக்கிறீர்கள்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இது தொந்தரவாக இருக்காதா. நீங்க மட்டுமா இந்த ரோடுல போறீங்க’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, கூட்டம் கூடியது. பயணிகளும் சேரனுக்கு ஆதரவாக பேசினார்கள். அதற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சேரனை சமாதானப்படுத்தினார்கள்.

இதுகுறித்து சேரன் கூறுகையில், நான் கடலூர் பகுதிக்கு செல்லும்போது தொடர்ச்சியாக இந்த பிரச்னை வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இந்த ஏர் ஹாரனை பயன்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள். இதுபோல் தொடர்ச்சியாக ஈடுபட்டால் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பின்னர் அங்கிருந்து கடலூருக்கு புறப்பட்டு சென்றார். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post புதுச்சேரி-கடலூர் சாலையில் ‘பஸ் ரேஸ்’ தனியார் பேருந்தை வழிமறித்து இயக்குநர் சேரன் வாக்குவாதம்: ஹாரனை தொடர்ந்து அடித்ததால் கடுப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry-Cudalur road ,Cheran ,Redtichavadi ,Puducherry ,Cuddalore ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வார நடவடிக்கை