திருச்சி: திருச்சி, புதுக்கோட்டை எஸ்பிகளுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 41 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்ட எஸ்பியாக வருண்குமார் உள்ளார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக உள்ளார். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடியிசம் ஒழிப்பு, போதை ெபாருள் தடுப்பு, சாதி கலவரங்களை உருவாக்குபவர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதனால் இந்த இரண்டு மாவட்டங்களிலும் இருந்த ரவுடிகள் அங்கிருந்து வெளியேறி வெளிமாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூர் அகரம் காட்டு பகுதியில் ரவுடி ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் (30) என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்கிற துரைசாமி புதுக்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் கடந்த ஜூலை 9ம் தேதி என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து இரு எஸ்பிக்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கொலை மிரட்டல்கள் வந்தன.
இதுதொடர்பாக தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்பி வருண்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மிரட்டல் விடுத்தவர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த கண்ணன்(48), திருப்பதி (35) என்பதும், இதில் கண்ணன் நாதக ஒன்றிய செயலாளராகவும், திருப்பதி உறுப்பினராகவும் உள்ளதும் தெரியவந்தது. இதில் மேலும் 41 பேருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, விருதுநகருக்கு சென்ற போலீசார், கண்ணன், திருப்பதியை கைது செய்தனர். மேலும் 41 பேரை தேடி வருகின்றனர்.
* சீமான் தூண்டுதலில் மிரட்டல் கைதானவர்கள் பகீர் வாக்குமூலம் கைதானவர்கள் அளித்த வாக்கு
மூலம் குறித்து போலீசார் கூறுகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் தூண்டுதலின் பெயரிலேயே எஸ்பி வருண்குமார், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப பெண்களுக்கு எதிராக வன்மமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் சில பேரை தூண்டி விட்டு கொலை மிரட்டல் பதிவு போட கூறியுள்ளதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் பேரில் வெளிநாட்டில் உள்ள அவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.
The post திருச்சி, புதுக்கோட்டை எஸ்பிக்கு கொலை மிரட்டல் நாம் தமிழர் நிர்வாகிகள் 2 பேர் கைது: மேலும் 41 பேருக்கு வலை appeared first on Dinakaran.