×

நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உடல் நசுங்கி பலி: 3 பெண்கள் படுகாயம்

பூந்தமல்லி: வண்டலூர் அடுத்த மேலகோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (30). ஆட்டோ டிரைவர். இவர், தினமும் அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் மீன் வியாபாரிகளை ஆட்டோவில் அழைத்து வந்து, வானகரம் மார்க்கெட்டில் மீன் வாங்கிச் செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை வானகரம் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக 3 பெண்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே சென்றபோது, அருகில் சென்ற வேன், ஆட்டோ மீது உரசியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, மற்றொரு வேன் மீது உரசி சாலை நடுவே கவிழ்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட டிரைவர் ஷாஜகான் மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில், அவர் உடல் நசுங்கி பலியானார். படுகாயமடைந்த 3 பெண்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஷாஜகானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உடல் நசுங்கி பலி: 3 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Shahjakhan ,Melakottaiyur ,Vandalur ,Vanakaram market ,Vanakaram ,Dinakaran ,
× RELATED சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு