×

ரூ.44,125 கோடியில் 15 புதிய தொழில் திட்டங்கள் 25 ஆயிரம் பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் மூலம் 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளன. குறிப்பாக, ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி ஆகிய துறைகளில் 15 நிறுவனங்கள் ரூ.44,125 கோடி அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு பல புதிய முதலீடுகள் வரப்பெறுவதோடு, அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

இதேபோல், எரிசக்தி துறை சார்பாக தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் – கொள்கை-2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் – கொள்கை-2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகிய புதிய கொள்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

* தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை – 2024
நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும். பகலில், சூரிய மின் உற்பத்தி நேரங்களில் நீரை உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு ஏற்றம் செய்து மின்சார ஆற்றலை சேமிக்கின்றன. இரவு நேரங்களில், மின்சார தேவை அதிகமாக இருக்கும் போது, சேமித்து வைக்கப்பட்ட நீரானது டர்பைன்கள் வழியாக விடப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கையின் வாயிலாக, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நீரேற்று புனல் மின் திட்டங்களை செயல்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் வரும் 2030ம் ஆண்டில் 20 ஆயிரம் மெகா வாட் சூரிய மின்உற்பத்தி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாக உள்ள அதிகப்படியான பசுமை எரிசக்தியை சமப்படுத்தி மின் கட்டமைப்பில் மின்சாரமாக மாற்றி பயன்படுத்த நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை வழிவகுக்கும்.

* சிறிய புனல் மின் திட்ட கொள்கை – 2024
சிறிய புனல் மின் திட்டங்கள் என்பது 100 கி.வா. முதல் 10 மெகாவாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய அளவிலான நீர்மின் நிலையங்களாகும். இந்த கொள்கையின் வாயிலாக, தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இந்த சிறிய நீர்மின் திட்டங்கள் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற தூய்மையான மின்சார வளத்தை உருவாக்க இயலும். நிலையான எரிசக்தி இருப்பை உறுதி செய்ய குறைந்துவரும் மரபுசார் எரிபொருளான நிலக்கரி, எரிவாயு போன்ற இருப்புகளை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம்.

சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு புனல் திட்டங்களால் கிடைக்கும் நிலையான மின் உற்பத்தி, மின் கட்டமைப்பின் திறனை சமன்படுத்த பயன்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்க முடியும். சிறு புனல் திட்டங்களால் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

* காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்த மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை – 2024
தமிழ்நாட்டில் 1984ம் ஆண்டு முதல் காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கண்ட காற்றாலைகள் குறைந்த திறன் கொண்ட பழைய காற்றாலைகளாகும். இந்த காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு ஆகிய மூன்று வழிகள் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி மேலும் 25 சதவீதம் அதிகரிக்க இந்த கொள்கை வழிவகுக்கும்.

இந்த மூன்று கொள்கைகள் வாயிலாக, நமது மாநிலத்தின் மாசற்ற, பசுமை எரிசக்தி அதிகரிக்கப்படுவதுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயம் செய்துள்ள 2030ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கினை அடைவதற்கும் இக்கொள்கைகள் வழிவகை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

* தமிழ்நாட்டில் 2030ம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்உற்பத்தி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* சிறிய புனல் மின் திட்டங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.

* காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்த மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை, தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி மேலும் 25 சதவீதம் அதிகரிக்க வழிவகுக்கும்.

The post ரூ.44,125 கோடியில் 15 புதிய தொழில் திட்டங்கள் 25 ஆயிரம் பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chief Mu. K. ,Stalin ,Chennai ,Mudhalvar Mu. K. ,Tamil Nadu ,Chief Mu K. ,Dinakaran ,
× RELATED பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு...