×

ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தும் திறனை இந்தியா கொண்டுள்ளது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நம்பிக்கை

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தும் திறனை இந்தியா கொண்டு இருப்பதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நோக்கில் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா. இந்த சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமை கோருவோம் என் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக 2029-ல் இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விரும்புகிறது.

இதற்கான முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொள்ளும் என அப்போது அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது நான் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தியாவால் என்ன செய்ய முடியும் மற்றும் அத்தகைய நிகழ்வுகளை நடத்தும் திறன் குறித்து அறிவேன். வரும் நாட்களில் நிச்சயம் அந்த சாத்தியம் உள்ளது. இதை ஒருங்கிணைத்து நடத்துவது சவாலான காரியம். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அமெரிக்காவுடன் போட்டியிட்டு இந்த வாய்ப்பை பெற்றோம். இந்த அனுபவம் சார்ந்து தயார்படுத்திக் கொள்ள இதில் போட்டியிடுவதே சிறந்த வழியாக இருக்கும். இரண்டாவதாக நாங்கள் இந்தியாவுடன் பணியாற்றி ஆர்வமாக உள்ளோம். தொழில்நுட்ப குழுவினரை அனுப்புமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்த ஒலிம்பிக் சார்ந்த ஏற்பாடுகளில் இந்தியர்கள் சிலரும் எங்கள் அணிகளுடன் இருந்தனர். மூன்றாவதாக இதில் எங்களுடன் நிறைய நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. அந்த நிறுவனங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்கின்றன. பிரிஸ்பேனுக்கும் செல்கின்றன. அவர்கள் இந்தியாவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்தால் நான் மகிழ்ச்சி கொள்வேன். இது அனைத்துக்கும் மேலாக ஒலிம்பிக்கை ஒருங்கிணைக்க ஒற்றுமை மிகவும் அவசியம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, விளையாட்டு வீரர்கள், பாதுகாவலர்கள், அரசு மற்றும் பலரின் பங்கு இதில் உள்ளது. சில விஷயங்களில் ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம்” என அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதை ஜியோ சினிமாவுடனான பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தும் திறனை இந்தியா கொண்டுள்ளது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Olympics ,French ,President Emmanuel Macron ,PARIS ,PRESIDENT ,EMMANUEL MACRON ,OLYMPIC GAMES ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் நிறைவு விழா: பதக்க வேட்டையில் இந்தியா சாதனை