×

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா : மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் மருத்துவ மாணவர்கள் கைகளில் மெழுகு வர்த்திகளை ஏந்தி பேரணியாக சென்றனர். இதே போல் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை மருத்துவர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி பேரணி நடத்தினர்.

பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 33 வயதான சஞ்சய்சிங் என்ற நபரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவமனைக்குள் தடையின்றி செல்ல அனுமதி பெற்றிருந்த இந்த இளைஞர் 9ம் தேதி 3வது தலத்தில் படித்து கொண்டிருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

மறுபுறத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் முழு உண்மையையும் போலீசார் கண்டுபிடிக்காவிட்டால் சிபிஐ க்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kolkata court ,CBI ,West Bengal ,Kolkata ,Kolkata High Court ,RG Gar Hospital ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க பலாத்கார தடுப்பு மசோதா...