×

ஃபிட் அன்ட் ஃபேஷன் அட் யுவர் டோர் ஸ்டெப்

நன்றி குங்குமம் தோழி

‘‘நமக்குப் பிடித்த மாதிரியான டெய்லர் செட்டாவது அதிர்ஷ்டம். அப்படி அமைந்தாலும் அவரைத் தேடிச் செல்வது சென்னை மாதிரியான பெரு நகரங்களில் ரொம்பவே கஷ்டம். இனி அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். நாங்களே உங்க டோர் ஸ்டெப் தேடி வந்து, உங்களின் அளவை எடுத்து, மெட்டீரியலையும் வாங்கிச் சென்று, ஒரே வாரத்திற்குள் உடைகளைத் தைத்து திரும்பவும் டோர் ஸ்டெப்பில் டெலிவரி செய்கிறோம்.

எங்களின் ஸ்டிச் கார்ட் (stitch cart) நடமாடும் வேனில் டிரையல் ரூம் இருப்பதால், உடையை அணிந்து பார்த்து, திருத்தம் தேவைப்பட்டால் வேனுக்குள் இருக்கும் மினி டெய்லரிங் யூனிட்டில் வைத்தே சரி செய்தும் கொடுத்தும் விடுகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் செலவும், அலைச்சலும் மிச்சம்’’ என பேச ஆரம்பித்தவர் ‘ஸ்டிச் கார்ட்’ எனும் பெயரில் நடமாடும் டெய்லரிங் யூனிட் ஒன்றை சென்னை குரோம்பேட்டையில் இயக்கி வரும் லாவண்யா.

‘‘கடந்த 45 வருடமாக ‘உமா டெய்லரிங் இன்ஸ்டியூட்’ என்கிற பெயரில் தாம்பரத்தில் என் மாமியார் செய்த தொழிலை, குடும்பத்தினர் ஒத்துழைப்புடன், அடுத்த அப்டேட் வெர்ஷனாய் நகர்த்தி இருக்கிறேன்’’ என்றவர், ‘‘சுருக்கமாக இதுவொரு டிஜிட்டல் வெர்ஷன்’’ என்கிறார் புன்னகைத்து.

‘‘எனது மாமியார் பெயர் உமாவதி. 70களிலே அவர் ஹேண்ட்மேட் எம்ப்ராய்டரி, ஆரி வேலைப்பாடு, ஹேண்ட் மேட் ஆர்ட் வேலைகளைக் கற்று டெய்லரிங்கிலும் டிப்ளமோ முடித்தவர். உமா டெய்லரிங் இன்ஸ்டியூட் எனப் பெயரிட்டு ஒரு மெஷினுடன் வீட்டில் அவரால் தொடங்கப்பட்ட தொழில் இது. தன்னைச் சுற்றி இருக்கும் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து, அப்படியே தன்னிடம் நன்றாகப் பயிற்சி எடுத்து, சிறப்பாக தைக்கும் பெண்களை ஒருங்கிணைத்து, ஆடைகளை வடிவமைத்து தைத்து கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக தொழில் விரிவடையத் தொடங்கியபோது, தாம்பரத்தில் செட்டிலாகி, சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கி, கீழே டெய்லரிங் யூனிட், மேலே வீடு என்று, தொழிலை மேலும் விரிவுப்படுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தை சிறப்பாக நடத்துவதற்கும், தனது குழந்தைகளின் மேற்படிப்புக்கும் இந்தத் தொழிலே பெரிய அளவில் வருமானத்தை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.எனது மாமியாரின் முக்கியமான செயலே தையல் கலையை கற்றுக் கொடுப்பதோடு நிற்காமல், அப்படியே பெண்கள் தொழில் தொடங்க தையல் மெஷின் வாங்க உதவுவது, தனக்கு வரும் ஆர்டர்களைப் பிரித்துக் கொடுப்பது, தொழில் செய்யத் தேவையான சின்னச் சின்ன உதவிகளைச் செய்வதென, பெண்கள் முன்னேற தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் என் நாத்தனாரும், எனது கணவரும் கல்லூரி மேற்படிப்புகளை முடித்து அவரவர் வாழ்க்கையில் செட்டிலாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான நான், திருமணமாகி உமா டெய்லரிங் இன்ஸ்டியூட் இயக்குநர் உமாவதியின் மருமகளாக சென்னை வந்தேன். எனது கணவர் என் மாமியாருக்கு ஒரே மகன். ஐ.டி. பணியில் இருக்கிறார். என்னிடத்தில் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிப்பு இருந்தது.சின்ன வயதில் இருந்தே எனக்கும் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் வேலைகளைச் செய்யப் பிடிக்கும். தையல் கலையும் ஒரு ஆர்ட் ஃபார்ம் என்பதால், மாமியாரிடமே எம்ப்ராய்டரிங், ஆரி ஒர்க், கட்டிங், டெய்லரிங் என எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றுக் கொண்டேன்.

இவ்வளவு தூரம் வளர்த்தெடுத்த தொழிலை எனக்கு பிறகு யார் நடத்துவார் என்கிற எனது மாமியாரின் மிகப்பெரிய கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், அவருடன் இணைந்து தொழிலையும் கவனித்து வந்தேன். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் உலகமே முடங்க, அடுத்து என்ன செய்யலாம் என குடும்பமாக யோசித்ததில், எனது கணவர் சுந்தரராஜன் தன் ஐ.டி. நண்பர்களோடு இணைந்து மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி, அதற்கு ஸ்டிச் கார்ட் எனப் பெயர் வைத்தார். ஆப் வழியே பெண்களுக்கு தேவைப்படும் பேட்டன், டிசைன் போன்றவற்றை சுலபமாய் தேர்வு செய்து, அளவைக் குறிப்பிட்டு முகவரி, கைபேசி எண்ணோடு அனுப்புகிற மாதிரி வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த ஆப்.

டிசைனர் மூலம் ஜும் காலில் வாடிக்கையாளர்களைப் பேச வைத்து, அவர்களின் விருப்பம் அறிந்து, உடைகளைத் தைத்து டோர் டெலிவரி செய்யத் தொடங்கினோம். ப்ளவுஸ் மட்டுமின்றி பெண்களுக்கான சல்வார், குர்த்தி, லெகன்கா, சவுத் இந்தியன், வெஸ்ட் இந்தியன், வெஸ்டெர்ன் அவுட்பிட் உடைகள், ஆரிவொர்க் வேலைப்பாடுகள், ப்ரைடல் ப்ளவுஸ் என எல்லாவற்றையும் எங்களின் ஆப் வழியாகவே ஆர்டர் பெற்று, டோர் ஸ்டெப் டெலிவரி கொடுக்க ஆரம்பித்ததில், இது பயங்கரமாக கை கொடுத்தது என்றே சொல்வேன்.

லாக்டவுன் முடிந்த பிறகும், மக்கள் மனநிலை டோர் ஸ்டெப் டெலிவரிக்கு மாறி இருந்ததை எங்களால் உணர முடிந்தது. எப்படி உணவு, மருந்து, மளிகைப் பொருட்கள், ஓலா, ஊபர் போன்றவற்றை டோர் ஸ்டெப்பில் பெற்று அலைச்சலைத் தவிர்த்து, நேரத்தை மிச்சமாக்குகிறோமோ, அதேபோல் உடைகளுக்கும் டோர் ஸ்டெப்பில் அளவு… பிக்கப்… டெலிவரி… ஆல்ட்ரேஷன் என முடிவெடுத்த பிறகே, ஸ்டிச் கார்ட் மொபைல் வேனை கஸ்டமைஸ்டாக உருவாக்கினோம்.ஃபிட்… ஃபினிஸ்… ஃபேஷன் வித் குவாலிட்டி என்பதே எங்களின் தாரக மந்திரம்’’ என்ற லாவண்யா, ‘‘எங்களுடையது ஒரு டீம் வொர்க். என்னோடு இருப்பவர்கள் அனைவரும் எங் டேலன்ட்ஸ்.

ப்ரைடல் ஆர்டர்ஸ், வெஸ்டென் அவுட்பிட், இந்தோ வெஸ்டர்ன் ஆர்டர்களுக்கு, ஃபேஷன் கன்சல்ட்டை ஜும் கால் மீட்டில் பேசவைத்து, ஆன் ஸ்பாட்டில் ஸ்கெட்ச் செய்து வாடிக்கையாளர்களுக்கு அப்போதே காட்டுகிறோம். இதற்கென ஃபேஷன் டிசைனிங் பிரிவில் லேகா, லக்கியா, ஹரிணி என்கிற மூன்று எங் டேலன்ட் கேர்ள்ஸ் இருக்கிறார்கள். மூவரும் ஃபேஷன் டிசைனிங் மாணவிகள். என்ன டிசைன் பண்ணலாம், எப்படி பண்ணலாம், அவர்களுக்கு எப்படி பொருந்தும் என்பதை ரொம்பவே ஆக்டிவாக முடிவு பண்ணுவார்கள். இது தவிர்த்து எங்கள் பணிகளை சோஷியல் மீடியா ப்ளாட் ஃபார்மில் பதிவேற்றும் பணிகளை ஐ.டி.யில் பணியாற்றும் தேஜஸ்ரீ கவனிக்கிறார்.

ஸ்டிச் கார்ட் வேனோடு நாங்கள் அதிகம் அபார்ட்மென்ட்ஸ், வில்லா என கேட்டெட் கம்யூனிட்டி மக்கள் இருக்கும் இடமாகவே செல்கிறோம். நாங்கள் வருவதை வாட்ஸ்ஆப் வழியே முன்கூட்டியே அறிவிப்பதால், தேவைப்படுவோர் எங்கள் மொபைல் வேனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன் வேலைகளை ஆன் ஸ்பாட்டில் வேனில் உள்ள யூனிட்டில் வைத்தே முடித்துக் கொடுக்கிறோம். டோர் ஸ்டெப் ஸ்டிச்சிங் என்பதற்காக எக்ஸ்ட்ரா தொகை எதுவும் நாங்கள் வாங்குவதில்லை.

தாம்பரம் யூனிட்டில் 10 டெய்லர்கள், 4 மாஸ்டர்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது, யூனிட்டை ரன் செய்வதென தாம்பரம் யூனிட் முழுவதையும் மாமியார்தான் பார்த்துக் கொள்கிறார். குரோம்பேட்டை யூனிட்டை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கி நான் பார்த்துக் கொள்கிறேன். தாம்பரத்தைச் சுற்றி 7 கிலோ மீட்டருக்குள் ஸ்டிச் கார்ட் வேனில் நாங்கள் டீமாகப் பயணிக்கிறோம். சென்னை முழுக்க இதனை விரிவுப்படுத்தும் எண்ணமும் இருக்கிறது. இதற்காக நிறைய எங் டேலன்ட்ஸ் தேவைப்படுகிறார்கள். பேஷனேட்டும் ஆர்வமும் இருப்பவர்களுக்கு ஸ்டிச் கார்டை பிரான்சைஸிஸ் கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது’’ என்றவாறு விடைபெற்றார்.

மாமியார், மருமகள் என்றாலே நீயா நானா மாதிரி வீடு போர்க்களம்தான் என்பதை மாற்றி, மாமியாரையே குருவாக மாற்றி, அவரிடம் உள்ள திறமைகளைக் கற்று, அவரின் தொழிலையே தனக்கான தொழிலாகவும் மாற்றி, இன்றைய டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி, தமிழ்நாட்டின் மருமகளாய் மிளிரும் கர்நாடகப் பெண் லாவண்யாவை மனதார வாழ்த்தி விடைபெற்றோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: கௌதம்

The post ஃபிட் அன்ட் ஃபேஷன் அட் யுவர் டோர் ஸ்டெப் appeared first on Dinakaran.

Tags : Taylor Seventh ,Chennai ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!