×

உன்னத உறவுகள்-அந்தக்கால உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

காலம் மாறி, சூழல்கள் மாறினாலும், பலப்பல முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், வசதிகளைப் பொறுத்து மனித மனங்கள் வேண்டுமானால் மாறலாம். நம் கலாச்சாரமும் பண்பாடுகளும் அப்படியேதான் இருக்கும். பழைய கலாச்சாரத்தில் வளர்ந்து இன்று பெரியவர்களாக, அனுபவம் பெற்றவராக நம்மை நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இன்றைய சூழல், அவர்களின் எண்ண அலை மாறுபட்டு, வேறுபட்டு சிந்தனைத் திறனில் இருவருக்கும் வேறுபாட்டை ஏற்படுத்திக் காட்டுகிறது.

அந்தக் காலத்தில் வீட்டின் மூத்தவரான தாத்தா குரலைக் கேட்டால், அவர் கம்பீர தோற்றத்தைப் பார்த்தால் அப்பா, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள், தம்பிகள் மற்றும் அனைத்து உறவுகளும் அடங்கிப்போகும். பதில் பேச அத்தனை பேரும் பயப்படுவார்கள். அடங்கி, ஒடுங்கி மறு பேச்சு பேசாமல் இருப்பார்கள். பயம்தான் அதற்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெரியவர்கள் சொன்னால், அதுதான் சரியாக இருக்கும், அவர்கள் அனைத்தையும் சரியாக பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையும் அவர்களை அப்படி நடக்கச் செய்யும். சிறியவர்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

மேலும் அதீத பாசம் தலைதூக்கியதால், குடும்ப வாரிசுகள் எதற்கும் சிரமப்படக்கூடாது என்பதை பெரியவர்கள் தங்கள் கடமையாக நினைத்து செயல்பட்டு வந்தார்கள். அத்தகைய பெரியவர்கள் குரலுக்கு புதிதாக திருமணமாகி வந்த மருமகள்களும், மருமகன்களும் கூட புரிந்து நடந்து கொண்டார்கள். அதனால் கூட்டுக் குடும்ப உறவுகளும், அவர்களின் புதிய வாரிசுகளும் கூட ஒன்றாக சங்கமித்தன.

பாட்டியோ பாவப்பட்ட ஜீவன். அந்த அன்பான முகத்தில் கூட கோபத்தை பார்க்க முடியும். பிறரை திட்டுவதற்காக அல்ல. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை இழுத்து வைத்து சாப்பாடு ஊட்டுவதற்கு மட்டும்தான். மற்றபடி கதைகள் சொல்லி வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் பாட்டிக்கு நிகர் பாட்டிதான். சொல்லும் கதைகளிலேயே எப்படியெல்லாம் வாழ்க்கை வாழவேண்டுமென்பதை பிள்ளைகள் மொழியிலேயே எடுத்துரைப்பார்.

நேரம் போவதற்காக கதை சொல்லாமல், வாழ்க்கை தத்துவத்தையே பிள்ளைகள் மனதில் பதிய வைத்து விடுவார். தவறு செய்தாலோ, குற்றம் செய்தாலோ அதற்கான தண்டனை கிடைக்கும் என்பது இயற்கையில் பிள்ளைகள் மனதில் விதைப்பார். அவர் சொல்லும் தேவதை, ராஜா மற்றும் பக்தி கதைகளின் முடிவில் நீதி தரும் விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பாட்டிகளே வீட்டில் கிடையாது. இருந்தாலும் அவர்களிடம் ஆசையுடன் கதை கேட்கும் பிள்ளைகள்தான் இருக்கிறார்களா?

பாட்டிகள் கதைகள் மட்டுமில்லை, வீட்டில் இருக்கும் பேரப்பிள்ளைகளுக்கு அழகாக இரட்டைப் பின்னல் பின்னி நீளமாக பூச்சரம் வைத்து அழகு பார்ப்பார். அந்தந்த காலகட்டத்தில் விளையும் பூக்களெல்லாம், தொடுத்து தலையில் வைத்து விடுவார். அழகான பட்டுப்பாவாடை, காதில் ஜிமிக்கி, கைநிறைய கண்ணாடி வளையல்கள் என வீட்டிற்குள் பெண் பிள்ளைகள் வலம் வரும் பொழுதெல்லாம் அவர்களை “குட்டி தேவதை” என்று பாசமாக அழைப்பார். தங்கள் வீட்டு குழந்தைகளைப் பார்ப்பது போல்தான் பக்கத்து வீட்டு குழந்தைகளையும் சமமாக பார்ப்பார்கள். இருவரும் சேர்ந்து விளையாடுவதை கண்டு ரசிப்பார். இன்று போல் விதவிதமான ‘சாக்லேட்டு’கள் அன்று கிடையாது. மாலையில் ஆளுக்கு இரண்டு என பாட்டி தரும் ஆரஞ்சு மிட்டாயின் சுவை எதற்கும் ஒப்பிட முடியாது.

அத்துடன் வீட்டில் செய்த பலகாரங்களும் கிடைக்கும். அவற்றை எல்லாம் இன்று நினைத்தாலும் ஏக்கம் தரும் சூழல்கள்தான். இப்பொழுது வளரும் குழந்தைகளுக்கு இவை எதுவுமே தெரியாமல், புரியாமல் வளர்கிறார்களே என்ற ஆதங்கம் நம்மில் பலருக்கு உள்ளது. பாட்டியின் அன்பு என்றுமே மாறாதது. ஐந்து வயதோ அல்லது வளர்ந்து கல்லூரிக்கு செல்லும் பேரன், பேத்தியோ எப்படியிருந்தாலும் அவர்கள் கண்களுக்கு அனைவருமே சிறிய குழந்தைகள்தான். பேரன், பேத்திகள் ஏதாவது கேட்டு அது நடக்கவில்லை என்றால், பிள்ளைகள் பாட்டியிடம் சென்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு பரிதாபமாக சொல்லுவார்கள். உடன் பாட்டி அந்த விஷயத்துக்காகவே தாத்தாவிடம் சண்டை போட்டு நிறைவேற்றிக் கொடுத்துவிடுவார். பாட்டியின் பாசம் பாதாளம் வரை போகும் என்று சொல்லலாம்.

ஊரிலிருந்து எந்த உறவினர் வந்து போனாலும், போகும் பொழுது பிள்ளைகள் கையில் ஏதாவது காசு கொடுப்பது வழக்கம். அதை அவரவர் உண்டியலில் போட்டுவிட வேண்டும். உண்டியலில் அவர்களின் பெயரும் எழுதப்பட்டிருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பக்குவாய் எடுத்துச் சொல்லி புரிய வைத்து, பிள்ளைகள் மனம் வருத்தப்படாமல் தவறை மட்டும் உணரவைப்பதில் பாட்டிக்கு நிகர் பாட்டிதான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரின் அனுபவங்கள் மூலம் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது ஏராளம். புத்தகங்கள் படிக்காமலே நமக்குப் பாடங்களை புகட்டுவதும் பாட்டிகளே! நம் குடும்ப உறவுகள் என்றுமே பாசங்கள், நேசங்கள் போன்றவற்றில் எந்த விரிசலும் ஏற்படக்கூடாது என்பதில் பாட்டிகள் அதிக அக்கறை காட்டுவார்கள். சிறிய மனஸ்தாபங்கள் கூட ஏற்படாதவாறு இணைத்து வைப்பார்கள்.

சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் பாட்டி கில்லாடி. எந்த ஒரு செயலையும் பக்குவமாய் அணுகி, தீர்வு சொல்வது அவர்களுக்கு கைவந்த கலை. அவர்களின் வயதும் அனுபவமும் சொல்லித் தரும் பாடங்கள் எந்த பல்கலைக்கழகங்களும் சொல்லித்தர முடியாது. தாத்தா-பாட்டியுடன் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகளும், பழகும் விதங்களும் மேம்பட்டதாகவே இருக்கும். அவர்கள் வாழ்வியல் செய்திகளை பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில், பரிசோதனைக் கூடங்களில் பிள்ளைகள் கல்வி சம்பந்தமான ஆய்வுகளை எப்படி செய்து கற்றுக் கொள்கிறார்களோ, அதைத்தான் நம் பெரியோர்கள் வாழ்வியல் என்னும் பாடங்களை குடும்பங்களில் நேரிடையாக வாழ்ந்து காட்டி விளக்கினார்கள்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உன்னத உறவுகள்-அந்தக்கால உறவுகள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனி கல் தொடாது கை!