×

பஞ்சமுக வாத்தியம்

தமிழகம் போற்றிய தொன்மை இசைக் கருவிகள் வரிசையில் தோற்கருவிகளாக அடக்கம் அந்தலி அமுத குண்டலி அரிப்பறை ஆகுளி, ஆமந்தரிகை ஆவஞ்சி, உடல் உடுக்கை, உறுமி, எல்லரி ஏறங்கோள் கோதை, கண்தூம்பு, கணப்பறை கண்டிகை, கல்லல் கிரிகட்டி (கொடுகொட்டி) குடமுழா, குண்டலம், சகடை, சுத்தமத்தளம், செண்டா, சிறுபறை தக்கை, தகுனித்தம், தட்டை, தடாரி, தவில், துந்துபி, பம்பை, பதவை, பேரி, மகுளி, மத்தளம், மிருதங்கம், முரசு, முழவு போன்ற கருவிகளை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.

இத்தகைய தோற்கருவிகளில் குடமுழவம் எனும் தோற்கருவிக்குப் பலவகை சிறப்புகள் உண்டு. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம், அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, தேவாரப் பதிகங்கள், சூளாமணி, சீவகசிந்தாமணி, ஆழ்வாரின் பாசுரங்கள், கல்லாடம், திருப் புகழ் போன்ற இலக்கியங்களிலும் குடமுழா பற்றிய பல குறிப்புகள் காணப் பெறுகின்றன.

குடமுழவம் வீணை தாளங் குறுநடைய சிறு பூதம் முழக்க மாக்கூத்தாடுமே என நாவுக்கரசரும்,

“கட்டுவட மெட்டுமுறு வட்ட முழவத்தில்
கொட்டுகர மிட்ட வொலி தட்டுவகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவரிடஞ்சீர்
வட்ட மதிலுள் திகழும் வண் திருவையாறே’’

என ஞானசம்பந்தரும் பாடும் பாங்கால் இக்குடமுழவத்தின் பெருமை விளங்கும்.குடமுழவம் சிவனாரின் தாண்டவத்திற்காக இசைக்கப் பெறுகின்ற தாளக் கருவியாகப் போற்றப் பெற்றது. ஒரு வாயுடைய குடமாக இக்கருவி இருந்தது. அக்கருவியின் முக்கியத்துவம் கருதி அதனை ஐந்து வாயுடைய பானையாகத் திருத்தி பஞ்சமுக வாத்தியமாக மாற்றினார். அவ்வாத்தியம் சிவனார் உருவமாகவே கருதப் பெற்றது.கி.பி. 11ஆம் நூற்றாண்டில், சோழப் பெருமன்னர்களின் ஆட்சி சீரும் சிறப்புடன் திகழ்ந்தகாலை சோழ மண்ணில் இவ்வாத்தியம் உதித்தது. அன்று தோன்றிய பஞ்சமுக வாத்தியங்கள், பல அழிந்தபோதும் இரண்டு மட்டும் அன்று தொடங்கி இன்றளவும் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி திருக்கோயில்களில் தொடர்ந்து இசைக்கப் பெறுகின்றன.

திருத்துறைப்பூண்டி அருமருந்தீசர் திருக்கோயிலில் உள்ள 3½ அடி உயரமும் 90 கிலோ எடையும் உள்ள பஞ்சமகா தாதுக் களால் (பஞ்சலோகம்) உருவாக்கப்பட்ட பஞ்சமுக வாத்தியம் உள்ளது. அதன்மேல் கி.பி. 11ஆம் நூற்றாண்டு எழுத்துப் பொறிப்புகளாக ‘‘இக்குடமுழா சமப்பித்திட்டார் சீகாருடையார் மல்லாண்டாரான சோழ கோனார்’’ என்றும் அதன் எடையும் குறிக்கப் பெற்றுள்ளன. ஆகம மற்றும் சிற்ப நூல்கள் அனைத்தும் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் முகத்திலிருந்துதான் ஒலி பிறந்ததாகக் குறிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே
சிற்பங்களும், இசை மற்றும் தாள நூல்களும் வகுக்கப் பெற்றன.

தமிழகத்தில் மகாசதாசிவ உருவ வழிபாடு பண்டுதொட்டு சிறந்து இருந்தது. நாவுக்கரசரால் சமணம் விடுத்துச் சைவம் தழுவிய மகேந்திர பல்லவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருவதிகையில் குணதர ஈச்சரம் எடுத்தான். இத்திருவதிகையில் பல்லவ மன்னனின் படைப்பாகச் சிறந்த பஞ்சமுக லிங்கம் உள்ளது. இதனைச் சதுர்முகலிங்கம் என்றும் அழைப்பர். மகாசதாசிவனின் திருமுகங்களான தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பவை லிங்க உருவில் முகங்களாக வடிக்கப்பட்டு, ஈசான முகம் வடிவின்றி லிங்கத்தின் உச்சிப்
பகுதியாகக் காட்டப்பெற்றுள்ளது.

7ஆம் நூற்றாண்டில் சதுர்முக லிங்கத்தை வடித்த தமிழகச் சிற்பிகள் 8-9ஆம் நூற்றாண்டுகளில் சிவபெருமானை அமர்ந்த கோலத்தில் நான்கு திருமுகங்களோடு (ஈசான முகத்தை வடிவின்றி கற்பனையோடு) வாகீச சிவனாகப் படைத்தனர். இவ்வாகீச சிவனார் வழிபாடு தஞ்சைப் பகுதியில் மட்டுமே மிக்கோங்கி திகழ்ந்திருந்துள்ளது. கரந்தை, கண்டியூர், செந்தலை போன்ற பகுதிகளில் இதுவரை ஐந்து திருவுருவங்கள் கிடைத்துள்ளன. இச்சிற்பங்களை இதுவரை பிரம்மன் என்றே கருதி வந்தனர்.

ஐந்து திருமுகங்கள் கொண்ட மகாசதாசிவத்தின் அம்சமாகவே பஞ்சமுக வாத்தியம் எனும் ஐமுக முழவம் தோன்றியது. அண்மையில் திருவாரூரிலிருந்து கிடைத்த ஏட்டுச் சுவடி ஒன்றில் குறிக்கப் பெற்றுள்ள கிரந்த ஸ்லோகமொன்று பாண்ட வாத்யம் எனும் பஞ்சமுக வாத்தியம் ஸ்ரீசதாசிவனுடைய ஐந்து முகத்திலிருந்து வந்தது என்றும், சிவனாரின் முகங்களான சத்யோஜாதத்திலிருந்து ‘நாகபந்தமும்’ வாமதேவத்திலிருந்து ஸ்வஸ்திகமும், அகோரத்திலிருந்து ‘தலக்நமும்’ தத்புருஷத்திலிருந்து ‘சுத்தமும்’, ஈசானத்திலிருந்து ‘ஸம்மகலியும்’ தோன்றியதாகவும், இதனை ஐந்து விதமாகவும் ஏழு விதமாகவும் வாசிக்க வேண்டும் என்று கூறுகிறது.

சுவடிகளின் குறிப்புகள் மட்டுமின்றி, இன்றளவும் நடைமுறையில் இக்குடமுழவத்தின் ஐந்து முகங்களுக்கும் சதாசிவனுடைய முகங்களின் பெயர்களே குறிக்கப் பெறுகின்றன.தமிழகம் தந்த இலக்கிய முத்துக்களில் முதன் முறையாக ஐமுக முழவம் பற்றிக் கல்லாடனார் இயற்றிய கல்லாடமே பேசுகிறது. இந்நூலில்;

தடா வுடலும்பர்த் தலைபெறு முழவம் நான்முகம் தட்டி நடுமுகம் உரப்ப…. நாடிரு முனிவர்க்கு ஆடிய பெருமான் என்றும்,முகனைந்து மணந்த முழவந்துவைக்க என்றும், ஐமுக முழவமாகிய பஞ்சமுக வாத்தியம் பற்றித் தெளிந்த சான்று பேசப் பெறுகின்றது.கல்லாடனார்க்குப் பிறகு பஞ்சமுக வாத்தியத்தைப் பற்றி அருணகிரிநாதர் பேசுகிறார். இவர் ‘குடபஞ்சமுகி’ என்று இவ்வாத்தியத்தைக் குறிப்பிடுவதோடு, தாம் யாத்த சந்தப் பாடல்கள் அனைத்திலும் தாளச் சொற்கட்டுகளுக்குச் சிறப்பிடம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை படைக்கப்பட்ட எந்த ஒரு சிற்பத்திலோ, செப்புத் திருமேனியிலோ அல்லது ஓவியங்களிலோ பஞ்சமுக வாத்தியம் இடம்பெறவில்லை. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை படைக்கப்பெற்ற சிற்பங்கள், செப்புத் திருமேனிகள் மற்றும் ஓவியங்களில் பஞ்சமுக வாத்தியம் இடம் பெற்றுள்ளது.

தில்லை நிருத்த சபையில் உள்ள சிற்பத் தொகுதியில் வாணன் பஞ்சமுக வாத்தியத்தையும் அதனுடன் இரண்டு தனி குட முழவங்களையும் கொண்டு ஏழு முகங்களில் தாளம் இசைப்பதாகக் காட்டப்பெற்றுள்ளது. இது விக்கிரம சோழன் காலத்திய படைப்பாகும். இதனை ஒத்த ஓவியம் ஒன்று (17 – 18ஆம் நூற்றாண்டு ஓவியம்) அதே தில்லை திருக்கோயிலில் சிவகாமி அம்மை மண்டபத்து விதானத்தில் இடம் பெற்றுள்ளது.

இங்கு ஏழு முகங்களுடன் குட முழவங்கள் இசைப்பது குறிப்பிடத்தக்கதாகும். தென் திருவாலங்காடு, திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்), தரங்கம்பாடி, செந்தலை, திருப்புன்கூர் போன்ற பல இடங்களில் உள்ள கி.பி. 11-12ஆம் நூற்றாண்டு ஆடவல்லான் செப்புத் திருமேனிகளின் பீடத்தில் நந்திதேவன் குடமுழவம் இசைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. சில பிற்காலச் செப்புத் திருமேனிகளிலும் பஞ்சமுக வாத்தியம் காட்டப் பெற்றுள்ளது.

திருவலஞ்சுழி திருக்கோயில் விதானத்து ஓவியம் தஞ்சை நாயக்கர்கள் காலப் படைப்பாகும். இதில் நந்தி குடமுழவம் இசைக்கும் ஓவியம் உள்ளது. இதேபோன்று திருவாரூர் திருக்கோயிலில் தேவாசிரிய மண்டபத்து ஓவியத் தொகுதியில் முட்டுக்காரன் ஒருவன் பஞ்சமுக வாத்தியம் இசைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது தஞ்சை மராத்திய மன்னன் சகஜி காலத்து ஓவியமாகும்.
ஐமுக முழவங்களில் எத்தனை வடிவமைப்புகள் இருந்தன என்பதற்கு இச்சிற்பங்களும் ஓவியங்களும் சான்றாக நிற்கின்றன. மேலும், இவை திருத்துறைப்பூண்டி, திருவாரூர் குடமுழவங்களை ஒத்தும் காணப்படுவதும் நோக்குதற்குரியது.

எனவே, இலக்கியங்கள் அடிப்படையில் நோக்கினாலும், சிற்பங்கள், ஓவியங்கள் அடிப்படையில் நோக்கினாலும் கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்துதான் பஞ்சமுக வாத்தியமாகக் குடமுழவத்தின் வளர்ச்சியைக் காண்கிறோம். திருத்துறைப்பூண்டி குடமுழவத்தில் காணப்படும் சோழர்கால எழுத்துப் பொறிப்பும் 11ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி என்பதும் இக்கருத்தை மேலும் வலுவூட்டுகின்றது.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post பஞ்சமுக வாத்தியம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Andali Amuta Kundali ,Ariparpara Agulli ,Amantharikai Avanchi ,Udal Udukai ,Urumi ,Elleri Epangol Gothai ,Kanthumbu ,Ganappara Kandikai ,Kallal Krigatti ,Sagatai ,
× RELATED தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை வெளியிட்டது தமிழ்நாடு அரசு