×

ரூ..30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது இந்திய ரயில்வே

டெல்லி: ரூ..30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை இந்திய ரயில்வே ரத்து செய்தது. வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டிருந்த அல்ஸ்தம் இந்தியா நிறுவனம் ரயில் விலையை அதிகமாக குறிப்பிட்டதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வந்தே பாரத் ரயிலுக்கு அதிகபட்ச விலையாக இந்திய ரயில்வே ரூ.140 கோடி நிர்ணயித்திருந்தது. அல்ஸ்தம் இந்தியா நிறுவனம் சமர்பித்த டெண்டரில் ஒரு ரயில் விலை ரூ.150.9 கோடியாக குறிப்பிட்டிருந்தது. ரயில்வே குறிப்பிட்ட அதிகபட்ச விலையை விட அல்ஸ்தம் குறிப்பிட்ட விலை ரயில் ஒன்றுக்கு ரூ.10.9 கோடி அதிகம் இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் அல்ஸ்தம் இந்தியா நிறுவனம் ரயில் விலையை ரூ.145 கோடிக்கு இறுதிசெய்ய விருப்பம் தெரிவித்திருந்தது. டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில் அல்ஸ்தம் குறிப்பிட்ட விலைதான் மிகக் குறைந்தது என்ற போதிலும் ரயில்வே நிர்ணயித்த விலையை விட அதிகம். அலுமினியத்தில் வந்தே பாரத் ரயிலின் கூடு தயாரிக்கப்படுவதுடன் அதை பராமரிக்கும் பொறுப்பும் டெண்டர் நிபந்தனையில் அடங்கும். ரூ.30,000 கோடி வந்தே பாரத் ரயில் டெண்டரை ரத்துசெய்ததன் மூலம் குறைந்தவிலைக்கு வாங்க முடியும் என்று ரயில்வே எதிர்பார்த்தது. அல்ஸ்தம் தவிர சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் ரயில் என்ற நிறுவனம் மட்டுமே வந்தே பாரத் ரயில் டெண்டரில் பங்கேற்றது.

ஐதராபாத்தைச் சேர்ந்த மேதா சர்வோ டிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஸ்டாட்லர் ரயில் சமர்பித்த டெண்டரில் ஒரு ரயிலுக்கு ரூ.170 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வந்தே பாரத் ரயில் டெண்டரை பெறக்கூடிய நிறுவனம் ஒப்புக்கொண்டபடி ரயில்களை தயாரித்து வழங்கியவுடன் ரூ.13,000 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ..30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது இந்திய ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Vande Bharat Railway ,Delhi ,Alstam India ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!