×

கன்னி ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன்

கன்னி ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு எனும் சொல்லே இனிப்பு கலந்த கசப்பு மருந்து. இத்தனைக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் பில்டர்ஸ்கள் இந்த ராசியில் அதிகமுண்டு. ‘‘உழுதவனுக்கு நிலம் சொந்தமில்லை என்பதுபோல் வீடு கட்டும் எனக்கு சொந்த வீடு இல்லையே’’ என்று புலம்பும் கன்னி ராசிக்காரர்கள் அதிகமுண்டு. உங்கள் ராசியாதிபதியான புதன், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்கிற எண்ணத்தைத் தூண்டக் கூடியவர். அடுத்தவருக்கு வாங்கித் தருவதிலேயே காலம் கழியும். உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் முயற்சிக்கும் நீங்கள், உங்களுக்கு என்று யோசிப்பதில்லை.

வீடு வாங்கலாம் என்று நினைத்தால், அந்த நேரத்திலிருந்து அடுக்கடுக்கான குறுக்கீடுகளை சந்திப்பீர்கள். ‘‘மூணாவது மெயின் ரோட்ல அஞ்சாம் நம்பர் வீடு. நல்ல லொகேஷன். பார்த்துட்டு அட்வான்ஸ் கொடுத்துடுங்க’’ என்று யாரோ சொல்வார்கள். அங்கே போனால், ‘‘பையன் அமெரிக்காவுல இருக்கான். விக்க வேணாம்னு சொல்லிட்டான்’’ என்பார்கள். உங்கள் ராசியாதி பதியான புதனுக்கு பகையாளியாகவும், பாதகாதிபதியாகவும் வரும் குருதான் இதற்கெல்லாம் காரணம்.

உங்களின் வீட்டு யோகத்தை அளிக்கும் நான்காம் இடத்திற்கு அதிபதியாக குருவே வருகிறார். மேலும், திருமணத்தை நிர்ணயிக்கும் இடத்திற்கும் அதிபதியாக வருகிறார். அதனாலேயே கன்னி ராசிக்காரர்கள் மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு முன் சொந்த வீடு வாங்க முடியாது. அப்படி வாங்கினால் திருமணம் தள்ளிப் போகும்; வீடு மட்டும் நிலைக்கும். கட்டடம், வீடு, மாங்கல்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் குரு, ஏதேனும் ஒன்றைத்தான் நிறைவேற்றித் தருவார்.

இவை பொதுவான விஷயங்கள். கன்னிக்குள் வரும் உத்திரம் நட்சத்திரம் 2,3,4 பாதங்களில் பிறந்தோருக்கு வீடு எப்படி என்று பார்ப்போம்.

உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன். உங்கள் ராசிநாதனான புதனுக்கும் அவர் நண்பர்தான். அதனால் அடிப்படையான ராசியின் விதியை ஜெயித்து ரசனையான வீட்டை வாங்குவீர்கள். உங்கள் வீட்டை நிர்ணயிக்கும் குருவிற்கு சூரியன் அதிநட்புக் கிரகமாக இருப்பதால், இஷ்டப்பட்ட இடத்தில் வீடு அமையும். ஆனால், ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் ராசியான கன்னிக்கு சூரியன் பன்னிரண்டாம் இடத்திற்கு உரியவராக வருகிறார். அதாவது விரயாதிபதி என்கிற இடத்திற்கு அதிபதியாக வருகிறார். இதனால் சொந்த வீட்டில் குடியேறும் எண்ணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் தூண்டுதலுக்குப் பிறகுதான் சொந்த வீட்டை வாங்குவீர்கள்.
காற்றோட்டமுள்ள வீடு கிடைப்பின் எத்தனை கிலோ மீட்டராக இருந்தாலும் பரவாயில்லை என்று தள்ளிப்போய் வாங்குவீர்கள். வாசலில் இரண்டு மரம் இருந்தால் சந்தோஷப்படுவீர்கள். அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும்போது பொதுவான இடம் எவ்வளவு, வீட்டின் அளவு எவ்வளவு என்கிற விஷயத்தை சரியாகப் பார்த்து வாங்க வேண்டும். இதன்மூலம் பிறகு புலம்புவதைத் தவிர்க்கலாம்.

அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் வசிக்கும் தெருவில் வீடு அமையும் வாய்ப்புகள் அதிகம். அதுபோல டியூஷன் சென்டர், மருத்துவமனை, பழமையான ஆலமரம் போன்றவை நீங்கள் வசிக்கும் தெருவில் இருந்தால் உங்கள் வாழ்க்கை மேன்மை பெறும். வீட்டின் தலை வாசல் கிழக்கு, தென்கிழக்கு திசையைப் பார்த்தும், நீங்கள் வசிக்கும் பகுதி ஊரின் கிழக்கு திசையிலும் இருந்தால் வளம் பெருகும். மேற்கண்ட திசைகள் அதிகாரப் பதவிகளை அளிக்கும். அபார்ட்மென்ட் என்றால் முதல் தளத்தில் வாங்குங்கள். மணலும், செம்மண்ணும் கலந்த பூமியாக இருத்தல் நல்லது. ‘‘ரெண்டு கிலோமீட்டர் நடந்தா பீச் வந்துடும்’’ என்றிருந்தால் இன்னும் நல்லது. உங்கள் பெயரிலேயே வீட்டைப் பதிவு செய்யலாம். பூர்வீகச் சொத்தை பெரிதாக நம்பிக் கொண்டிருக்காதீர்கள். உத்திரத்தில் நிறைய பேர் பணி ஓய்வு பெற்று வந்த பணத்தில்தான் வீடு வாங்குவார்கள். கொஞ்சம் சீக்கிரம் என்றால் 45லிருந்து 55க்குள் வாங்குவீர்கள். பூசம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் கிரகப் பிரவேசம், பத்திரப் பதிவை வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஹஸ்தம். கன்னி ராசியிலேயே அதிக கனவு காணும் நட்சத்திரம் ஹஸ்தம். காலணி முதல் சட்டைக் காலர் வரை பார்த்துப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவீர்கள். உணவும் கமகமவென்று இருக்க வேண்டும். இப்படி ரசனைகளின் அரசனாக இருக்கும் நீங்கள், வீடு பற்றி கனவு காணாத நாளே இருக்காது. எளிதில் எதிலும் திருப்தியடையாத நீங்கள், வீட்டு விஷயத்திலும் அப்படித்தான். உங்கள் நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் வருகிறார். அதனால் உச்சபட்ச அழகை வீட்டிலும் எதிர்பார்ப்பீர்கள். உங்களின் சொந்த ஜாதகத்தில் 3,6,11 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால் பிடித்த ஊரில், ரசனைக்கேற்ற வீடு அமையும்.

பொதுவாகவே கன்னி ராசிக்கு வீடு தாமதமாகத்தான் அமையும் என்று சொன்னோம் அல்லவா. அதுபோலத்தான் இவர்களுக்கும். அதற்கு காரணமே இவர்கள்தான். ‘‘ஜன்னலைத் திறந்தா ஜில்லுனு காத்து வரணும். இந்த வீட்ல பக்கத்து வீட்டு சமையல் ரூம்தான் தெரியுது’’ என்று விலக்குவீர்கள். இப்படி ஏதாவது காரணம் சொல்லியே காலத்தைக் கடத்துவீர்கள். உங்களில் பலர் மழையை நின்று ரசிக்க தனி இடம், செல்லப் பிராணிக்கு சின்னதா வராண்டா என்றெல்லாம் எதிர்பார்ப்போடு இருப்பீர்கள். படுக்கையறையின் வண்ணத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பீர்கள். வீட்டின் வரவேற்பறையை எத்தனை அழகு படுத்துவீர்களோ, அதே அழகை பாத்ரூமிலும் கொண்டு வருவீர்கள்.

குழந்தைகளை அருகே அழைத்து, ‘‘உங்களுக்கு ரூம் எப்படிம்மா வேணும்’’ என்று கேட்டுக் கேட்டு கட்டித் தருவீர்கள். எப்படியாவது உருட்டிப் புரட்டி பணத்தை தயார் செய்து வீடு வாங்குவீர்கள். நகரத்தில் வீடு வாங்க பூர்வீகத்தை விற்க நேர்ந்தாலும், கொஞ்சம் வசதி வந்தவுடன் சொந்த ஊருக்கு அருகில் நிலம் வாங்க மறக்க மாட்டீர்கள். எப்போதுமே, எதைச் செய்தாலும் பெரிதாகச் செய்ய வேண்டும், இல்லையெனில் செய்வதில் அர்த்தமில்லை என்பதுதான் உங்களின் பாலிஸி. கண்ணுக் கெட்டிய தூரத்தில் நீர்நிலை இருந்தால் நாலு பங்கு கூடவே பணம் கொடுத்து இடத்தை வாங்குவீர்கள்.

களிமண், மணல் அதிகமுள்ள வாகாக பூமி அமைந்தால் நல்லது. அபார்ட்மென்ட்டோ அல்லது வீடோ… எல்லா மாடிகளுமே நல்லதுதான். நீங்கள் வசிக்கும் ஊரின் வடமேற்கு, தென்கிழக்கு பகுதியில் வீடு கிடைத்தால் அதிர்ஷ்டம். அதே திசையில் வீட்டின் தலைவாசலை அமைத்து விடுங்கள். 30 வயதுக்குள் வீடு அமைந்து விட வேண்டும். அப்படி இல்லையெனில் 46 வயதுக்குப் பிறகு அமையும் வீடுதான் தங்கும். புதுமனை புகுவிழாவையும், பத்திரப் பதிவையும் மிருகசீரிஷம், உத்திராடம், அவிட்டம், உத்திரம் போன்ற நட்சத்திரங்களில் வைத்துக் கொள்ளுங்கள். பரதநாட்டியப் பள்ளி, நடிகர், நடிகைகள் வசிக்கும் பகுதிகளில் வீடு கிடைத்தால் சந்தோஷமாக வாங்குங்கள்.

கன்னி ராசியில் மூன்றாவதாக வருவது சித்திரை நட்சத்திரம். இதில் முதல் இரண்டு பாதங்கள் மட்டும் கன்னியில் வருகிறது. பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் இது. அதனால் வீட்டு விஷயத்தில் கொஞ்சம் டென்ஷனாகவே இருப்பீர்கள். வீடு வாங்கிய பிறகுதான் நம்மை எல்லோரும் மதிக்கிறார்கள் என்கிற அளவுக்கு நினைத்துக்கொள்வீர்கள். புத்திக்குரிய புதன் ராசியாக இருந்தாலும், உணர்ச்சி பிழம்புக்குரிய செவ்வாய் நட்சத்திர அதிபதியாக வருகிறார். புதனும், செவ்வாயும் கொஞ்சம் எதிர் எதிர் அம்சம் கொண்டவை. புத்தி கட்டளையிடுவதை உடம்பு செய்ய மறுக்கும். இந்த மாதிரி சின்ன போராட்டம் உங்களிடத்தில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ‘‘அந்த இடம் நல்லாத்தான் இருக்கு. பார்க்கலாம்’’ என்று தள்ளிப் போடுவீர்கள். அதற்குள் ஆயிரம் சந்தேகங்கள் தோன்றி, ‘‘ரெண்டு வருஷம் போகட்டும்… பார்க்கலாம்’’ என்று விட்டுவிடுவீர்கள்.

உங்களின் நட்சத்திர தேவதையாக விஸ்வகர்மா வருகிறார். இதனால் மிதமிஞ்சிய கற்பனை வளமும், அசாத்தியமான படைப்பாற்றலும் இருக்கும். வாஸ்துவிலிருந்து மாடர்ன் ஆர்ட் வரையில் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வீர்கள். 39 வயதிலிருந்து 57 வயது வரை சனி தசை நடக்கும் காலத்தில் கொட்டிக் கொடுக்கும். 42,43 வயதுகளில் வாழ்வில் சில மைல்கற்களை எட்டுவீர்கள். 46,47,51 வயதுகளில் நிறைய விவசாய நிலங்களையும் சேர்த்து வாங்க ஆரம்பிப்பீர்கள்.

தரைத் தளத்தில் வீடு அமைந்தால் பரவாயில்லை. கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. போலீஸ் குடியிருப்புப் பகுதி, தீயணைப்புத் துறை அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வீடு கிடைக்கிறதா என்று பாருங்கள். எல்லா வகை மண்ணுமே ராசியாக இருக்கும். இந்த ராசிக்குள்ளேயே நிறைய வீடுகள், நிலங்கள் வாங்கிப் போடுபவர்கள் நீங்களாகத்தான் இருப்பீர்கள். செவ்வாய் உங்களின் நட்சத்திரத்திற்கு அதிபதியாக வருவதால் பூர்வீக வீடோ, அல்லது தானாக சம்பாதித்த வீடோ எளிதாக அமைந்து விடும்; கவலைப்படாதீர்கள். அஸ்வினி, ரோகிணி, பூசம், மகம், ஹஸ்தம், அனுஷம், திருவோணம், மூலம், உத்திரட்டாதி, மகம் போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனைப் புகுவிழாவையும் வைத்துக்கொள்ளுங்கள்.

கன்னி ராசிக்காரர்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிக்கும் பங்கு குருவைவிட சுக்கிரனுக்குத்தான் அதிகம். எனவே குபேரன் வழிபட்ட தலங்களையோ அல்லது குபேரன் அருளும் தலங்களையோ வணங்கி வாருங்கள். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் ஆலயமாகும். தஞ்சபுரீஸ்வரரை குபேரன் வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், உமாதேவியுடன் வந்து குபேரனுக்கு மேற்கு நோக்கி காட்சி தந்தார். செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள் புரிந்தார். இக்கோயிலுக்குள் குபேரன் ஈசனை வழிபடும் சந்நதி மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. குபேரன், லிங்க மூர்த்தமாக சிவன், குபேர மகாலட்சுமி என்று தனிச் சந்நதியாக அமைந்துள்ளது. இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு குபேரனே சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இந்த ஆலயம் தஞ்சாவூர் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளது.

The post கன்னி ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன் appeared first on Dinakaran.

Tags : Virgo ,
× RELATED விருச்சிக ராசி வெற்றி ராசி