×

தொடர்ந்து பெய்த கனமழையால் ஏலகிரி மலைப்பாதையில் மீண்டும் உருண்டு விழுந்த ராட்சத பாறை: ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது


ஏலகிரி: தொடர்ந்து பெய்த கனமழையால் ஏலகிரி மலைப்பாதையில் மீண்டும் உருண்டு விழுந்த ராட்சத பாறை ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏலகிரி மலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏலகிரி மலையின் 14 கொண்டை ஊசி வளைவுகளிலும் பாறைகள் உருண்டு விழுந்து. இதில் 3வது, 5வது மற்றும் 9வது கொண்டை ஊசி வளைவுகளில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது. உடனடியாக ெநடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மலைச்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பாறைகள் சரிந்து உருண்டு, மரங்களும் சாலையில் சாய்ந்தன. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த சாலை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறையினர் 10வது கொண்டை ஊசி வளைவில் முறிந்து விழுந்த மரத்தை ஜேசிபி இந்திரம் மூலம் அகற்றினர். அதனைத் தொடர்ந்து 14வது கொண்டை ஊசி வளைவில் விழுந்த ராட்சத பாறையை அகற்றினர். சாய்ந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றிய பின்னர் வாகனங்கள் சீராக சென்றது.

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும் உள்ளதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சுவாமியை வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில், மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் மழைக்காலம் தொடங்கியுள்ள காரணத்தினால் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் நீர்வீழ்ச்சியில் குளிக்க வரும் 15ம் தேதி வரை தடை விதித்துள்ளனர். இதனால் நேற்று வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

The post தொடர்ந்து பெய்த கனமழையால் ஏலகிரி மலைப்பாதையில் மீண்டும் உருண்டு விழுந்த ராட்சத பாறை: ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Elagiri pass ,JCP ,Elagiri ,Elagiri mountain ,Elagiri hill ,Jolarpet ,Tirupattur district ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பு கோயில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றம்