×

திருமங்கலத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளால் யூனியன் அலுவலக பாதை மூடல்: பொதுமக்கள் ஊழியர்கள் அவதி


திருமங்கலம்: திருமங்கலத்தில் ரயில்வே ஸ்டேசன் அருகே ரயில்வேகேட் அமைந்துள்ளது. புறநகர் பகுதிகளான காமராஜாபுரம், கற்பகம்நகர், சோனைமீனாநகர், சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விருசங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் ரயில்வே கேட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த பகுதியில் புதிய மேம்பாலம் வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ரயில்வே ஸ்டேசனையொட்டி காமராஜபுரம் பகுதியில் துவங்கிய பணிகள் தற்போது ரயில்வேபீடர் ரோட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மேம்பால பணிகளுக்காக தற்போதுள்ள திருமங்கலம் யூனியன் அலுவலகத்தின் முகப்பு பகுதி இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலகம் என்பதால் யூனியன் அலுவலகம் அருகே கடந்த ஒரு மாதகாலமாக பணிகள் நடைபெற்று வந்த நிலையிலும் அலுவலகத்திற்கு சென்று வரும் பகுதியில் பணி நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று முதல் யூனியன் அலுவலகம் முன்பாக பணிகள் துவங்கியுள்ளது. இங்கு மெகாசைஸ் பள்ளம் தோண்டப்பட்டதால் யூனியன் அலுவலகத்தின் வாயில் கதவு மூடப்பட்டது.இதன் காரணமாக யூனியன் அலுவலகத்திற்கு பிடிஓ முதல் அனைத்து ஊழியர்களும் தற்போது தாலுகா அலுவலகத்தில் நுழைந்து, பின்பகுதி வழியாக யூனியன் அலுவகம் செல்கின்றனர்.

மேலும் அதிகாரிகளின் வாகனங்களையும் எளிதில் வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் திருமங்கலத்திலிருந்து ஆலங்குளம், மண்டேலாநகர் வழியாக மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் செல்லும் 37 பி டவுன்பஸ் நிற்கும் யூனியன் அலுவலகம் பஸ்ஸ்டாப் இருந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டதால் ,பொதுமக்கள் பஸ்சிற்கு காத்திருக்க இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post திருமங்கலத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளால் யூனியன் அலுவலக பாதை மூடல்: பொதுமக்கள் ஊழியர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Thirumangalam ,Kamarajapuram ,Karpakamnagar ,Sonaimeenanagar ,Sungurambatti ,Vidathakulam ,Virusangkulam ,Union ,
× RELATED மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள்...