×

கோவை உயர்மட்டப் பாலம் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை பரப்பிய எஸ்.பி.வேலுமணி: அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு, 2010ம் ஆண்டு கலைஞரால் கருத்துரு உருவாக்கப்பட்டது. பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் ஒப்பனக்கார வீதி சாலைகளில், அதிகப் போக்குவரத்துச் செறிவு இருந்ததாலும், உக்கடம் பகுதியில், போக்குவரத்துச் நெரிசல் மிக அதிகமாக இருந்ததாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கலைஞரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2011 நவம்பர் 14ல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில், உயர்மட்டப்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், 7 ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2018 ஏப்ரல் 2ம் தேதி பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. வேலுமணி, 7 ஆண்டு காலம் கோவை மாவட்ட மக்களின் மீது எவ்வித அக்கரையும் காட்டவில்லை.

10 ஆண்டுகால தாமதத்திற்குப் பின் 2018-19ம் நிதியாண்டில், 2021 ஜனவரி 24ம் தேதி, உயர்மட்டப் பாலத்தினை நீட்டித்து, மீண்டும் பணி துவங்க ஒப்பந்தம் போடப்பட்டது. 2021 மே 7ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, 12 சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன. முதல்வர் அறிவுரையின்படி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று, அறிவுரைகள் வழங்கி செயல்படுத்தியுள்ளேன். 88 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டது. ரூ.318 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வரால், கடந்த 9ம் தேதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இதுபற்றி பத்திரிகைகள் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுமணி, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, பேட்டியாக அளித்துள்ளார். திமுக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம். தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி வரும் 31ம் தேதிக்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கோவை உயர்மட்டப் பாலம் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை பரப்பிய எஸ்.பி.வேலுமணி: அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : SP Velumani ,Coimbatore High Level Bridge ,Minister ,EV Velu ,CHENNAI ,Minister of Public Works, Highways and Minor Ports ,AV Velu ,Coimbatore Athupalam ,Ukkadam ,Oppanakkara Road ,Palakkad ,Pollachi ,Coimbatore High Bridge ,
× RELATED முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும்...