×

அதானி குழுமத்தில் செபி தலைவர் முதலீடு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் எச்சரிக்கை

புதுடெல்லி: அதானி குழுமத்தில் செபி தலைவர் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது என கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக செபி விசாரணை நடத்தி வந்தது. ஆனால், செபியின் விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘செபியின் அதிகார வரம்பில் உச்ச நீதிமன்றம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது. எனவே, செபியே இந்த விவகாரத்தைத் தொடர்ந்து விசாரிக்கும் என தனது உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரிய (செபி) தலைவரும் அவரது கணவரும் அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதாக, ஹிண்டன்பர்க் கடந்த சனிக்கிழமை பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், செபி தலைவர் மாதபி புச், அவரது கணவர் தவல் ஆகிய இருவரும் வெளிநாட்டில் உள்ள நிதி மேலாண்மை நிறுவனம் மூலம், இந்தியாவில் உள்ள அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். ஐஐஎப்எல்-ன் கட்டுப்பாட்டில் உள்ள 360 ஒன் டபிள்யூஏஎம் என்ற நிதி மேலாண்மை அமைப்பின் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். செபியின் முழுநேர உறுப்பினராக மாதபி புச் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, இந்த பங்குகள் அனைத்தையும் தனது கணவர் பெயருக்கு மாற்றியுள்ளார். பின்னர் தலைவராக பொறுப்பேற்கும் தருணத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த அகோரா பார்ட்னர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால், செபி தலைவராகப் பொறுப்பேற்று 2 வாரங்களுக்குப்பிறகு தனது பெயரில் இருந்த அனைத்து பங்குகளையும் தனது கணவர் பெயருக்கு மாற்றியுள்ளார் என குறிப்பிட்டிருந்தது.

அதானி குழும முறைகேடு பற்றி விசாரிக்கும் செபி அமைப்பின் தலைவரே அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருந்ததால்தான், அதானி குழும முறைகேடு குறித்து நேர்மையான விசாரணைக்கு வாய்ப்பில்லை. இதனால்தான் அந்த குழுமம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை செபியின் தலைவர் மாதபி பூரி புச், அதானி நிறுவனம் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், ஹிண்டன்பர்க்கின் அறிக்கை தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்தக் கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்திருந்தனர். இந்த விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் கூறியதாவது:
செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு நாட்டின் மிக தீவிரமான பிரச்னையாகும். அதானி குழுமத்திற்கும் அதன் தலைவர் கவுதம் அதானிக்கும் பிரதமர் மோடி ஆதரவளிக்கிறார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது செபி அறிக்கையை அடிப்படையாக கொண்டது. ஆனால் செபியின் தலைவர் மற்றும் அவரது கணவரும் அதானியுடன் தொடர்புடைய நிறுவனங்களில் தாங்கள் முதலீடு செய்துள்ளதை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்தது போல் இருக்கிறது. உச்ச நீதிமன்றமும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கான சட்ட அம்சங்களை காங்கிரஸ் ஆராயும்.

பிரதமர் மவுனம் காப்பது நம்பகத்தன்மையை கேள்விகுறியாக்கியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக அமலாக்க இயக்குனரகத்தை பயன்படுத்தி இந்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. ராகுல்காந்தியை அமலாக்கத்துறை நோட்டீஸ் மூலமாக மிரட்டுவதற்கு முயற்சிக்காதீர்கள். இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். ஹிண்டன்பர்க் அறிக்கை நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. செபி தலைவர் பங்கு சந்தையை ஒழுங்குபடுத்துதல், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்.

ஆனால் அவர் இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செய்தியை அரசு எப்படி பார்க்கிறது? இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டு எழுந்த போதிலும் செபியின் தலைவர் அதே நிலைப்பாட்டில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழுவை கண்டு ஒன்றிய அரசு ஏன் பயப்படுகின்றது? மறைப்பதற்கும் பயப்படுவதற்கும் ஏதோ இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது அல்லவா? கூட்டுக்குழு விசாரணை என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்காவிட்டால் நாடு தழுவிய அளவில் தீவிர போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், ‘‘ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். தற்போது குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்த தரவுகள் வரும் வரை காத்திருப்போம்’’ என்றார்.

பாஜ நிராகரிப்பு
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை பாஜ நேற்று நிராகரித்தது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜவை சேர்ந்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ‘‘மக்களால் மறுக்கப்பட்ட பின்னர், காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் இணைந்து இந்தியாவில் பொருளாதார அராஜகம் மற்றும் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு சதி செய்துள்ளனர். இது இந்தியா பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதற்கு, நாட்டில் முதலீட்டை அழிப்பதற்கும் ஒரு கண் துடைப்பாகும். சிறு முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை அதிக அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர். காங்கிரஸ் ஏன் அவர்களுக்கு தீங்கிழைக்க விரும்புகிறது,’’ என்றார்.

‘ஹிண்டன்பர்க் மீது நடவடிக்கை’ அமைச்சர் தகவல்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், ‘‘இது நாட்டை அவதூறு செய்யும் கும்பல். ராகுல் மற்றும் ஜெய்ராம் ரமேஷ். ஹிண்டன்பர்க் நம்மை இழிவுபடுத்துகிறது. நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இவர்கள் நாட்டின் எதிரிகள். ஹிண்டன்பர்க்கிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத் கூறுகையில், ‘‘ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக செபி அறிக்கையை வௌியிட்டுள்ளது. அதன் தலைவரும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் மேலும் கூறுவதற்கு ஒன்றுமில்லை’’ என்றார்.

அதானி குழும பங்குகள் மதிப்பு: ₹20,412 கோடி சரிந்தது
அதானி குழுமத்துடன் செபி தலைவருக்கு உள்ள தொடர்பு குறித்த ஹிண்டன்பர்க்கின் அறிக்கை, இந்திய பங்குச்சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை வர்த்தகத் துவக்கத்திலேயே பங்குச்சந்தை சரியத் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 375 புள்ளிகள் சரிந்து 57,083 புள்ளிகள் வரை சென்றது. முடிவில், 193 புள்ளிகள் உயர்ந்து 57,652 ஆக இருந்தது. இருப்பினும் அதானி வில்மர், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் , அதானி போர்ட்ஸ் என அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்சமாக 17 சதவீதம் வரை சரிந்தன. ஒட்டுமொத்த அளவில், அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ₹1 லட்சம் கோடி வரை சரிவடைந்தது. பின்னர் வர்த்தக முடிவில் சரிவில் அதானி நிறுவனங்கள் சில மீண்டாலும், அந்த குழும பங்குகள் மதிப்பு ₹20,412கோடி சரிவடைந்தது.

The post அதானி குழுமத்தில் செபி தலைவர் முதலீடு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sebi ,Adani Group ,Congress ,New Delhi ,Hindenberg Institute ,America ,Parliamentary joint committee ,Dinakaran ,
× RELATED அதானி குழும முறைகேட்டில் செபி...