×

சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படையுங்கள்: போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு

டாக்கா: சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த போராட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் டெல்லி அருகே பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து மாணவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இந்நிலையில், இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் சகவத் உசேன் நேற்று கூறுகையில்,‘‘ போராட்டக்காரர்கள் தங்களிடம் உள்ள சட்டவிரோத ஆயுதங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் போராட்டத்தின் போது சாதாரண உடையில் இருந்த வாலிபர் துப்பாக்கியை காட்டிய சம்பவம் நடந்தது. வங்க தேச துணை ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது அந்த வாலிபரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களின் போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. அரசு கவிழ்ந்த போது,பெரும்பாலான போலீசார் பணிக்கு திரும்பவில்லை. அப்படி ஒரு சிலர் திரும்பியவர்களும் சீருடைஅணியாமல் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். வங்கதேச போலீசார் கடந்த 6ம் தேதி ஸ்டிரைக் அறிவித்திருந்தனர். ஸ்டிரைக்கில் ஈடுபட்ட போலீசாருடன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் சகவத் உசேன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசாரின் கோரிக்கைகள் ஏற்று கொள்வதாக அறிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

நாட்டில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில் வங்கிகளில் இருந்து ரொக்கமாக ரூ.2 லட்சம்(இந்திய மதிப்பில் ரூ.1.42 லட்சம்) வரம்பு விதிக்கப்பட்டுள்ளதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால் பல்வேறு வணிகங்கள் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்வதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரசு நடவடிக்கைக்கு வர்த்தகர்கள், தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அரசின் நிதி ஆலோசகர் சலேஹூதின் அமகமது,‘‘ தற்போதைய சூழ்நிலைக்கு பணம் எடுப்பதில் கட்டுப்பாடு கொண்டுவந்தது மிக முக்கியமானதாகும்’’ என்றார்.

* நீதிபதி எச்சரிக்கை
வங்கதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சையத் ரெபாத் அகமது கூறுகையில்,நீதித்துறையை சேர்ந்தவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* வங்கி ஆளுநர்கள் ராஜினாமா
வங்க தேச மத்திய வங்கியின் ஆளுநர் ராஜினாமா செய்த நிலையில் மத்திய வங்கியின் துணை ஆளுநர்கள் 2 பேர் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

* அமெரிக்காவில் இந்துக்கள் பேரணி
வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறி வைத்து தாக்குதல் நடப்பதை கண்டித்து அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டனில் நேற்று அமெரிக்க இந்தியர்கள், வங்க தேசத்தை இந்துக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் பேரணியில் கலந்து கொண்டனர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படையுங்கள்: போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,government ,Dhaka ,interim government ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...