×

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2.16 கோடியில் பூங்கா, பள்ளி கட்டிடம் நீர்த்தேக்க தொட்டிகள்: மேயர், துணை மேயர் திறந்து வைத்தனர்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 32வது வார்டு, கடப்பேரி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று 15வது நிதி குழு மானிய நிதியின் கீழ், ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட 2 நீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 59வது வார்டு சக்தி நகர் பகுதியில் புனரமைக்கப்பட்ட பூங்கா, கிழக்கு தாம்பரம், 70வது வார்டு, சதாசிவம் நகர் பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட பூங்கா ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இதில் மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன் கலந்துகொண்டார். அதேபோல, மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலம், 17வது வார்டு ஜமீன் பல்லாவரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டிடம், மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2.16 கோடியில் பூங்கா, பள்ளி கட்டிடம் நீர்த்தேக்க தொட்டிகள்: மேயர், துணை மேயர் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : 2.16 Crore Park ,Corporation ,Mayor ,Deputy ,Tambaram ,Tambaram Corporation ,32nd Ward, Kadapperi ,15th Finance Committee ,Crore Park ,School ,Dinakaran ,
× RELATED பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி