×

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ‘செபி’ தலைவர், மோடிக்கு எதிராக ராகுல் பகீர் குற்றச்சாட்டு

மும்பை: அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர். மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர். இதன் காரணமாக, அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது ‘செபி’ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘செபி’யின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்தது. இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை.

ஹிண்டன்பர்க் கூறும் குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அடிப்படை ஆதாரம் அற்றவை என்று நிராகரிக்கப்பட்டவை’ என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல், செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை. ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில், செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், ‘ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை, அதானிக்கும் மோடிக்குமான நெருங்கிய தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டியது.

தற்போது அதானி குழுமத்துக்கும், செபி தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து புதிய குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டியது அவசியம்’ என்று பதிவிட்டுள்ளார். மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‘சிறு முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபியின் தலைவரா? அல்லது அதானியா? குற்றச்சாட்டுக்கு ஆளான செபியின் தலைவர் மாதபி புரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா? நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதற்கான காரணமும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது’ என்று கூறி உள்ளார்.

இந்நிலையில் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக, வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிந்து 79,330 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிந்து, 24,320 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி aவருகின்றன. அந்த வகையில் அதானி எண்டர்பிரைசஸ் – 3.55% சரிவு, அதானி போர்ட்ஸ் – 4.80%, அதானி கிரீன் எனர்ஜி – 4.47% சரிவு, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் – 4.16%, அதானி எரிவாயு – 7.22%, அதானி வில்மர் – 4.72% உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவைக் கண்டுள்ளது. அதானி நிறுவனங்களின் பங்குகள் 3 முதல் 6 சதவீதம் வரை சரிந்தன. அதே நேரம் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகளும் முறையே 1.84 சதவீதம் மற்றும் 1.75 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதானி நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால், முதலீட்டாளர்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The post அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ‘செபி’ தலைவர், மோடிக்கு எதிராக ராகுல் பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Adani ,USA ,Hindenburg ,Sebi ,Rahul Bakir ,Modi ,Mumbai ,US ,Hindenburg Research Institute ,Adani Group ,Matabi Puri Buch ,Stock Market Regulatory Board ,Dhawal Buch ,Adhani ,president ,Dinakaran ,
× RELATED அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்...